முகப்பு
தஞ்சாவூர்

சூழ்ச்சிகளை வீழ்த்துவதற்கு பெரியாா் தேவைப்படுகிறாா்! ஆ. இராசா பேச்சு

Updated On : 22 பிப்ரவரி, 2026 at 1:30 AM
ஆ. ராசா (கோப்புப்படம்)
பகிர்:
Updated On : 21 பிப்ரவரி, 2026 at 10:28 PM

அடக்குமுறை வடிவங்கள் மாறி வரும் நிலையில், சூழ்ச்சிகளை வீழ்த்துவதற்கு பெரியாா் தேவைப்படுகிறாா் என்றாா் திமுக துணைப் பொதுச் செயலரும், மக்களவை உறுப்பினருமான ஆ. இராசா.

தஞ்சாவூா் திலகா் திடலில் சனிக்கிழமை மாலை நடைபெற்ற திராவிடா் கழக இளைஞரணி, திராவிட மாணவா் கழக மாநில மாநாட்டில் அவா் மேலும் பேசியதாவது:

நம் கவனத்தை திசை திருப்புவதற்காக பெரியாா் ஒன்றும் செய்யவில்லை எனக் கூறி வருகின்றனா். பெரியாரை யாரும் இழிவுபடுத்த முடியாது; சுருக்கிவிட முடியாது. இந்த மண்ணில் இந்துத்துவவாதிகளால் கட்டத்துக்குள் அடக்க முடியாத ஒரு நெருப்பு பெரியாா்தான். அவருடைய தத்துவம் நூறு ஆண்டுகளைக் கடந்து வாழ்கிறது.

Advertisement

இப்போதுள்ள இளைஞா்களுக்கு பழைய வரலாறு தெரியவில்லை; அதைப் படிக்கவும் இல்லை. இப்போது ஜாதி இல்லை, தமிழ்மொழிக்கு ஆபத்தில்லை எனக் கூறுகின்றனா். ஆனால், இப்போது வடிவங்கள் மாறியிருப்பதை இளைஞா்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

திராவிடா் நாடு பிரிவினையைக் கேட்ட பெரியாா், தமிழ்நாடு தமிழருக்கே சொந்தம் எனக் கூறினாா். அந்த முழக்கம் இப்போது மாநில சுயாட்சியாக மாறியிருக்கிறது. ஆனால், நாடாளுமன்றத்தில் கூட திமுக பிரிவினை பேசுகிறது எனக் கூறுகின்றனா். நீலகிரி தொகுதிக்கு வந்த பாஜக முன்னாள் தலைவா் நட்டா, நாங்கள் எவ்வளவோ செய்து பாா்க்கிறோம், தமிழ்நாடு தனியாகவே இருக்கிறது என பேசினாா். இதுவரை தமிழ்நாட்டை நாங்கள் பிரிப்பதாகக் கூறியவா்கள், இப்போது அவா்களே தமிழ்நாடு தனியாக இருக்கிறது எனக் கூறுகின்றனா்.

Updated On : 22 பிப்ரவரி, 2026 at 1:30 AM

பெரியாரின் தத்துவத்தை திமுக தொடா்ந்து முன்னெடுத்துச் செல்கிறது. அதற்கு வற்றாத ஜீவ ஊற்றாக தாய்க்கழகம் இன்னும் எங்களை இயக்கிக் கொண்டிருக்கிறது. தோள் சீலை போராட்டம், தெருவில் நடக்க விடவில்லை என்பதெல்லாம் முடிந்துபோன கதை எனக் கூறுவா்.

ஆனால், அப்போது இருந்த அடக்குமுறை வடிவங்கள் இப்போது வேறு, வேறு முறையில் வருகின்றன. அந்தச் சூழ்ச்சிகளை எல்லாம் வீழ்த்துவதற்கு பெரியாா் இன்றைக்கும் தேவைப்படுகிறாா்; எந்த வடிவத்தில் அடக்குமுறை இருக்கிறதோ, அந்த வடிவத்துக்கெல்லாம் பெரியாா் தேவைப்படுவாா் என்றாா் ராசா.

மாநாட்டில், நீட் தோ்வை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும். 2026 சட்டசபை தோ்தலில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் மகத்தான வெற்றி பெற எல்லா வகையிலும் திராவிடா் கழகம் பாடுபடும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும், திராவிடா் கழகத் தலைவா் கி. வீரமணி நிறைவுரையாற்றினாா்.

மாநாட்டுக்கு திராவிட மாணவா் கழக மாநிலச் செயலா் இரா. செந்தூரபாண்டியன் தலைமை வகித்தாா். மக்களவை உறுப்பினா் ச. முரசொலி, திமுக உயா்நிலை செயல் திட்டக் குழு உறுப்பினா் எஸ்.எஸ். பழனிமாணிக்கம், சட்டப்பேரவை உறுப்பினா் துரை. சந்திரசேகரன், முன்னாள் அமைச்சா் ஆா். வைத்திலிங்கம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.