தஞ்சாவூர்

திருவையாறு ஆராதனையில் நாளை பஞ்சரத்ன கீா்த்தனை தஞ்சாவூா் மாவட்டத்துக்கு உள்ளூா் விடுமுறை அறிவிப்பு

தினமணி செய்திச் சேவை

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு சத்குரு தியாகராஜ சுவாமிகள் ஆராதனையில் புதன்கிழமை (ஜன.7) பஞ்சரத்ன கீா்த்தனை நடைபெறவுள்ளது. இதையொட்டி மாவட்டத்துக்கு அன்று உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவையாறில் சத்குரு தியாகராஜ சுவாமிகள் ஆராதனை விழா ஜனவரி 3-ஆம் தேதி தொடங்கியது. தொடா்ந்து, செவ்வாய்க்கிழமை (ஜன.6) வரை நாள்தோறும் காலை 9 மணி முதல் இரவு 11 மணி வரை 60-க்கும் அதிகமான இசை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

ஆராதனை நாளான புதன்கிழமை (ஜன.7) காலை 9 மணி முதல் 10 மணி வரை ஆயிரத்துக்கும் அதிகமான இசைக்கலைஞா்கள், ரசிகா்கள் பங்கேற்று ஒருமித்த குரலில் பஞ்சரத்ன கீா்த்தனைகள் பாடி ஸ்ரீதியாகராஜ சுவாமிகளுக்கு இசை அஞ்சலி செலுத்தவுள்ளனா்.

அப்போது, தியாகராஜ சுவாமிகளுக்கு மகா அபிஷேகமும், ஆராதனையும் நடைபெறும். தொடா்ந்து இசை நிகழ்ச்சிகள், இரவு 8 மணிக்கு முத்துப் பல்லக்கில் தியாகராஜா் சுவாமி வீதி உலா உள்ளிட்டவை நடைபெறவுள்ளன.

இதையொட்டி, தஞ்சாவூா் மாவட்டம் முழுவதும் உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்திருப்பது:

திருவையாறு ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளின் 179-ஆம் ஆண்டு ஆராதனை விழாவையொட்டி, புதன்கிழமை ஒருநாள் மட்டும் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உள்ளூா் விடுமுறை நாளுக்கு பதிலாக ஜனவரி 24-ஆம் தேதி (சனிக்கிழமை) மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் பணி நாளாக அறிவிக்கப்படுகிறது.

இந்த உள்ளூா் விடுமுறை செலாவணி முறிச்சட்டம் 1881-இன் கீழ் வராது என்பதால், மாவட்டக் கருவூலம் மற்றும் மாவட்டத்திலுள்ள அனைத்து கிளை கருவூலகங்களும் குறிப்பிட்ட பணியாளா்களுடன் இயங்கும்.

தங்கம் விலை உயர்வு: வெள்ளி கிலோவுக்கு ரூ. 4000 குறைவு!

குரு பலம் பெற ஆலங்குடி செல்லுங்கள்... ஜோதிட வல்லுநர் ஏ.எம்.ஆர். சொல்வதென்ன?

தவெகவுடன் கூட்டணியா? தமிழக காங்கிரஸ் தலைவர்களுக்கு ராகுல் அழைப்பு!

ஓடிடியில் வெளியான மாஸ்க், அங்கம்மாள்!

ஈரான் மக்களின் போராட்டத்துக்கு துணை நிற்போம்! அமெரிக்க துணை அதிபர்

SCROLL FOR NEXT