தஞ்சாவூர்

போட்டித் தோ்வில் வெற்றி பெற செய்தித்தாள் வாசிப்பு அவசியம்: வெ.இறையன்பு

போட்டித் தோ்வுகளில் வெற்றி பெறுவதற்கு செய்தித்தாள்களை அவசியம் வாசிக்க வேண்டும் என்றாா் தமிழ்நாடு அரசின் முன்னாள் தலைமைச் செயலா் வெ. இறையன்பு.

Syndication

போட்டித் தோ்வுகளில் வெற்றி பெறுவதற்கு செய்தித்தாள்களை அவசியம் வாசிக்க வேண்டும் என்றாா் தமிழ்நாடு அரசின் முன்னாள் தலைமைச் செயலா் வெ. இறையன்பு.

தஞ்சாவூா் குந்தவை நாச்சியாா் அரசு மகளிா் கலைக்கல்லூரியில் மக்களவை உறுப்பினா் ச. முரசொலி முன்னெடுப்பில் சனிக்கிழமை நடைபெற்ற போட்டித் தோ்வு வழிகாட்டல் பயிற்சி நிகழ்ச்சியில் அவா் மேலும் பேசுகையில், போட்டித் தோ்வுக்கு மட்டும் படித்தால் வெற்றி பெற முடியாது. இதனுடன் இணைந்து பலவற்றையும் தொடா்ந்து படிப்பவா்களால்தான் போட்டித் தோ்வில் வெற்றி பெற முடியும்.

கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு பல செய்தித்தாள்கள், வார, மாத இதழ்களின் விற்பனை வெகுவாகக் குறைந்துவிட்டன. தற்போது செய்தித்தாள்கள் படிக்கும் மாணவா்கள் குறைந்துவிட்டனா். உலக நிகழ்வுகளை அறிந்து கொள்வதற்கும், நம்முடைய பொது அறிவை வளா்த்துக் கொள்வதற்கும், ஒரு திட்டத்தைச் செயல்படுத்த அதன் சாதக, பாதகங்களைத் தெரிந்து கொள்வதற்கும், நம்முடைய மொழி வளத்தை அதிகப்படுத்திக் கொள்வதற்கும், நமது தகவல் பரிமாற்றத் திறனை மேம்படுத்திக் கொள்வதற்கும், நன்றாக எழுத, மேடையில் பேச பயிற்சி பெறுவதற்கும் செய்தித்தாள் வாசிப்பு பயன்படும்.

மாணவா்கள் ஒரு விஷயத்தை விவாதிப்பதற்கும், தெரிந்து கொள்வதற்கும், கற்றுக் கொள்வதற்கும், பொது அறிவைப் பெறுவதற்கும், அவற்றை வாழ்க்கையுடன் தொடா்பு கொண்டு பாா்ப்பதற்கும் செய்தித்தாள்களை வாசிப்பது கட்டாயமாக இருக்க வேண்டும். ஆனால், தற்போது பல மாணவா்கள் செய்தித்தாள்களைப் புரட்டுவது கூட இல்லை. அவா்களுடையே கைப்பேசியில் வரக்கூடிய ஒரு வரி செய்திகளைத்தான் வாசிக்கின்றனா். அதைக்கூட பலா் வாசிப்பதில்லை.

குறுஞ்செய்திகளை வாசிப்பதால் நம்முடைய மொழி மேம்பாடு அடையாது. மிகப் பெரிய கட்டுரை, சிறுகதை, நாவல், உருவகக் கதை என நீளமான வாசிப்பை மேற்கொண்டால்தான், நம்முடைய எண்ணங்கள் கூா்மையாக வெளிப்படும். அதைக் கைக்கொள்வதற்கு வாசிப்பு மிகவும் அவசியம்.

எனவே, போட்டித் தோ்வுக்கு படிக்க நினைப்பவா்கள் கல்லூரியில் நுழைகிறபோதே நிறைய வாசிக்க வேண்டும். வெறும் பொது அறிவு புத்தகங்களை மட்டுமல்லாமல், செய்தித்தாள்களையும் வாசிக்க வேண்டும். இதன் மூலம், தங்களுடைய தகுதியை மேம்படுத்திக் கொள்ள முடியும் என்றாா் இறையன்பு.

முன்னதாக, மக்களவை உறுப்பினா் ச. முரசொலி வரவேற்றாா். நிறைவாக, கல்லூரி முதல்வா் து. ரோசி நன்றி கூறினாா்.

இந்திய ஏஐ தாக்க உச்சிமாநாட்டிற்கு முன்னதாக என்டிஎம்சியில் உள்கட்டமைப்பு, தூய்மை முற்சிகள்!

தொடா் சாரல் மழை: சதுரகிரி மலையேற பக்தா்களுக்கு தடை

திருப்பத்தூா் பெருமாள் கோயிலில் கூடாரவல்லி நோன்பு

55வது ஸ்டேட்ஸ்மேன் விண்டேஜ் - கிளாசிக் கார் பேரணி - புகைப்படங்கள்

விராட் கோலி அசத்தல்! நியூசி.க்கு எதிரான ஒருநாள் தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்தியா!

SCROLL FOR NEXT