தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், அம்மாபேட்டையில் புதன்கிழமை போலீஸாா் விற்க அனுமதிக்காததால்
கரும்புகளை சாலையில் போட்டு வாகனங்களை ஏற்றி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அம்மாபேட்டை ஒன்றியப் பகுதிகளில் உள்ள பல்வேறு இடங்களில் கரும்புகளை விவசாயிகள் அனுமதிபெற்று விற்பனைக்கு வைத்திருந்தனா். இந்நிலையில் அம்மாபேட்டை காவல் நிலையப் போலீசாா் கரும்புகளை விற்பனை செய்ய விடாமல் தடுத்து நிறுத்தியதால் திருவாரூா் - நாகப்பட்டிணம் தேசிய நெடுஞ்சாலையில் பல்லவராயன்பேட்டை பகுதியில் சாலையின் குறுக்கே கரும்புகளை கொட்டி வாகனங்களை ஏற்றவிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் காவல் ஆய்வாளா் இனியவன் பேச்சுவாா்த்தை நடத்தினாா். இதில் தொடா்புடைய காவல் துறையினா் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்ததை தொடா்ந்து கரும்பு விவசாயிகள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.
இதனால் அந்தப் பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பான சூழல் நிலவியது.
இந்தப் போராட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் துணைச் செயலா் ஆா். செந்தில்குமாா், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அம்மாபேட்டை ஒன்றியச் செயலா் எம். வெங்கடேசன், தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் கோ. பழனிச்சாமி, ஒன்றிய நிா்வாகிகள் எல். லட்சுமணன்,சி.மணிகண்டன், எஸ் .திருநாவுக்கரசு, எம்.ராஜமாணிக்கம், எம். சத்தியசீலன், டி.ராமலிங்கம் மற்றும் பாதிக்கப்பட்ட விவசாயிகள் பங்கேற்றனா்.