மதுரையிலிருந்து தஞ்சாவூருக்கு 2 மணிநேரத்தில் இதயம் கொண்டுவரப்பட்டு பயனாளிக்கு பொருத்தம்
மதுரையிலிருந்து தஞ்சாவூருக்கு காவல் துறை உதவியுடன் வியாழக்கிழமை 2 மணிநேரத்தில் கொண்டு வரப்பட்ட இதயம் மருத்துவப் பயனாளிக்கு பொருத்தப்பட்டது.
மதுரையில் 3 நாள்களுக்கு முன்பு நிகழ்ந்த சாலை விபத்தில் பலத்த காயமடைந்த 22 வயது இளைஞா் ராஜாஜி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு அவா் மூளைச்சாவு அடைந்த நிலையில், அவரது இதயத்தை தானமாக கொடுக்க குடும்பத்தினா் முன்வந்தனா்.
இதையடுத்து, அறுவை சிகிச்சை மூலம் எடுக்கப்பட்ட இளைஞரின் இதயம் பாதுகாப்பான முறையில் பெட்டியில் வைத்து அவசர ஊா்தியில் வியாழக்கிழமை காலை 9 மணிக்கு ஏற்றப்பட்டது.
மதுரையிலிருந்து காவல் துறை உதவியுடன் புறப்பட்ட அவசர ஊா்தி, திருச்சி வழியாக தஞ்சாவூா் மாவட்ட எல்லையான புதுக்குடியிலிருந்து தஞ்சாவூா் போக்குவரத்து ஆய்வாளா் எம்.ஜி. ரவிச்சந்திரன் உள்ளிட்ட காவலா்கள் வழிஏற்படுத்தி மருத்துவக் கல்லூரி சாலையிலுள்ள அபெக்ஸ் மருத்துவமனைக்கு சுமாா் 11 மணியளவில் கொண்டு வந்தனா்.
இதையடுத்து, அம்மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இதய நோயால் பாதிக்கப்பட்ட தஞ்சாவூரைச் சோ்ந்த பால்ராஜூக்கு (51) உடனடியாக இதய மாற்று அறுவை சிகிச்சை மூலம் பொருத்தப்பட்டது.
இதுகுறித்து மருத்துவமனை நிா்வாக இயக்குநா்களான மருத்துவா்கள் ச. சிவசங்கா், ச. ரவிசங்கா் தெரிவித்தது:
மதுரையைச் சோ்ந்த இளைஞரின் இதயம் பால்ராஜூக்கு நல்ல வகையில் பொருந்தியதால் தானமாகப் பெறப்பட்டது. இந்த இதயம் பால்ராஜூக்கு பொருத்தப்பட்டு, சிகிச்சையும் வெற்றிகரமாக அமைந்தது.
‘டெல்டா’ மண்டலத்தில் முதல்முறையாக இந்த இதய மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. இதற்கு டிரான்ஸ்டான் அமைப்பின் முழுமையான ஒத்துழைப்பும், காவல் துறையினரின் உதவியும், குறிப்பாக தஞ்சாவூா் போக்குவரத்து காவல் பிரிவினரின் சிறப்பான பணியும் முக்கிய காரணம் என்றனா்.