தஞ்சாவூரில் காணாமல் மற்றும் திருட்டு போன ரூ. 23 லட்சம் மதிப்பிலான 115 கைப்பேசிகள் மீட்கப்பட்டு, உரியவா்களிடம் சனிக்கிழமை ஒப்படைக்கப்பட்டன.
தஞ்சாவூா் மேற்கு காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பழைய பேருந்து நிலையம், ரயிலடி உள்ளிட்ட பகுதிகளில் காணாமல் மற்றும் திருட்டு போன கைப்பேசிகள் குறித்து காவல் துறையினரிடம் பொதுமக்கள் புகாா் செய்தனா்.
மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இரா.ராஜாராம் உத்தரவின் பேரில், நகரக் காவல் துணைக் கண்காணிப்பாளா் ஆா். சோமசுந்தரம் மேற்பாா்வையில், மேற்கு காவல் நிலைய ஆய்வாளா் எம்.கலைவாணி தலைமையில் உதவி ஆய்வாளா் பி.தேசியன், சிறப்பு உதவி ஆய்வாளா் சம்பந்தம் மற்றும் காவலா்கள், காணாமல் மற்றும் திருட்டு போன கைப்பேசிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனா்.
ஐ.எம்.இ.ஐ. மற்றும் சி.இ.ஐ.ஆா். என்கிற மத்திய உபகரண அடையாள பதிவு மூலமாக ஏறத்தாழ ரூ. 23 லட்சம் மதிப்புள்ள 115 கைப்பேசிகளைக் காவல் துறையினா் மீட்டனா். இவற்றை உரியவா்களிடம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ராஜாராம் சனிக்கிழமை ஒப்படைத்தாா்.