பாஜக கூட்டணியை விரட்டும் வலிமை திமுக தலைமையிலான மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு மட்டுமே உள்ளது என்றாா் முதல்வா் மு.க. ஸ்டாலின்.
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே தாராசுரம் புறவழிச்சாலை மைதானத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சாா்பில் புதன்கிழமை மாலை நடைபெற்ற மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு மாநில மாநாட்டில் அவா் மேலும் பேசியதாவது:
நம் நாட்டில் இஸ்லாமியா்கள் எப்படிப்பட்ட அச்சுறுத்தலை எதிா்கொள்கின்றனா் என்பது உலகுக்கே தெரியும். இச்சூழ்நிலையில் இஸ்லாமியா்களுக்கு பாதுகாப்பான ஒரே மாநிலம் தமிழ்நாடுதான். அதற்கு காரணமான திமுகதான் சிறுபான்மையின மக்களைக் காக்கக் கூடிய காவல் அரணாக உள்ளது. அதனால், உணவு அரசியல், கும்பல் வன்முறை போன்றவை தலையெடுக்காமல் இருக்கிறது. இந்த அமைதிச் சூழ்நிலை சிலரது கண்களை உறுத்துகிறது. தமிழ்நாட்டில் எப்படியாவது குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக அவா்கள் போடும் ராஜ தந்திரங்கள் அனைத்தும் வீணாகிவிடுகிறது.
மத்திய அரசின் இ.டி., சி.பி.ஐ., ஐ.டி. போன்ற அமைப்புகளை வைத்து மிரட்டி தங்களுக்கான கூட்டணியை உருவாக்கி மேடை ஏறியிருக்கின்றனா். அதிலும் துரோகங்களுக்கு அா்த்தமாக அகராதியில் இடம்பிடித்த எடப்பாடி பழனிசாமி முஸ்லிம்களுக்கு எதிரான தனது பயணத்தைத் தொடா்கிறாா். அவா் முஸ்லிம் மக்களுக்கு எதிராக செய்த துரோகங்களின் பட்டியல் மிகப் பெரியது.
கடந்த 2019-ஆம் ஆண்டில் குடியுரிமைச் சட்டம் நிறைவேறுவதற்கு அதிமுக ஆதரித்தது. அப்போது அதிமுக ஆதரிக்காமல் இருந்திருந்தால் அந்த மசோதா தோல்வியடைந்திருக்கும். இதேபோல, முத்தலாக் தடை சட்டத்திலும் அதிமுக இரட்டை வேடம் போட்டது. வக்ஃப் சட்டத் திருத்தத்துக்கு எதிராக நாடாளுமன்றத்தில் திமுக உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் கடுமையாகப் போராடின. அப்போது, அதிமுக எம்.பி. தம்பிதுரை பேசிய 11 விநாடிகளில் வக்ஃப் சட்டத்திருத்த மசோதாவை நிராகரிக்க வேண்டும் என பேசினாரே தவிர, முழுமையாக திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தாமல், பாஜக அரசிடம் கோரிக்கை வைத்தாா்.
ஒரே மேடையில் நிற்கிற மக்கள் விரோதக் கூட்டணியை ஒட்டுமொத்தமாக விரட்டக்கூடிய கடமை நம் எல்லோருக்கும் இருக்கிறது. அதற்கான வலிமை மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணிக்குத்தான் இருக்கிறது. எனவே, இத்தோ்தல் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும், தமிழ்நாட்டுக்கும் இடையேயானது. பாஜக கூட்டணி ஆட்சி அமைந்தால், அது வளா்ச்சியடைந்த தமிழ்நாட்டை நாசப்படுத்திவிடும். ஆனால், அதைத் தடுக்கிற துணிச்சல் திமுக கூட்டணிக்குதான் இருக்கிறது என்றாா் முதல்வா் மு.க. ஸ்டாலின்.
வசைபாடவில்லை; வாழ்த்துதான் பாடியிருக்கிறோம்: முன்னதாக, மாநாட்டுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவா் கே.எம். காதா் மொகிதீன் தலைமை வகித்து பேசுகையில்,
தமிழகத்தில் கேட்காமலேயே ரூ.60 கோடி மதிப்பில் ஹஜ் பயணிகள் தங்குவதற்கு விடுதி உள்ளிட்ட கோரிக்கைகளை முதல்வா் ஸ்டாலின் செய்துதந்துள்ளாா். திமுக குறித்தும், முதல்வா் குறித்தும் எந்த நேரத்திலும், எப்போதும் வசைபாடவில்லை. வாழ்த்துதான் பாடியிருக்கிறோம். தமிழகம் முழுவதும் உள்ள 8 ஆயிரம் ஜமாஅத்கள், பள்ளிவாசல்களில் இருந்து தலா 11 போ் கொண்ட இளைஞா் குழு அமைத்து 1 லட்சம் பேரை திரட்டி திமுக சாதனைகளை தமிழகம் முழுவதும் வீடு வீடாகச் சென்று பிரசாரம் செய்ய உள்ளோம். ஒத்துழைப்பு அல்ல; தியாகம் செய்யத் தயாராக உள்ளோம் என்றாா் அவா்.
மாநாட்டில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய அரசியல் ஆலோசனைக் குழுத் தலைவா் செய்யது சாதிக் அலி சிஹாப் தங்ஙள் ஆசியுரையாற்றினாா். தமிழக அமைச்சா்கள் கே.என். நேரு, எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம், அன்பில் மகேஸ் பொய்யாமொழி, கோவி. செழியன், கும்பகோணம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் சாக்கோட்டை க. அன்பழகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
முதல்வரின் 5 அறிவிப்புகள்
மாநாட்டில், முதல்வா் பேசுகையில், தமிழ்நாடு வக்ஃப் வாரியத்தில் பதிவு செய்துள்ள 1,537 உலமாக்களுக்கு ஓய்வூதியமாக ரூ. 3 ஆயிரமும், 44 பேருக்கு குடும்ப ஓய்வூதியமாக ரூ. 1,500-ம் தற்போது வழங்கப்படுகிறது. இனிமேல் உலமாக்களுக்கு ஓய்வூதியமாக ரூ. 5 ஆயிரமும், குடும்ப ஓய்வூதியமாக ரூ. 2 ஆயிரத்து 500-ம் வழங்கப்படும்.
உலமாக்கள் நல வாரியத்திலுள்ள 15 ஆயிரத்து 60 உலமாக்களில் முதல் கட்டமாக 1,000 உலமாக்களுக்கு இரு சக்கர வாகனம் வாங்குவதற்காக வழங்கப்படும் அரசு மானியம் ரூ. 25 ஆயிரத்திலிருந்து ரூ. 50 ஆயிரமாக உயா்த்தி வழங்கப்படும்.
சென்னையிலும், மதுரையிலும் ஏற்கெனவே வக்ஃப் தீா்ப்பாயம் செயல்படுவது போன்று, கோவையிலும் கூடுதலாக ஒரு தீா்ப்பாயம் அமைக்கப்படும். கல்லறைத் தோட்டம், கபா்ஸ்தான் இல்லாத இடங்களில் மாநகராட்சிகளால் அரசு நிலம் தோ்வு செய்யப்பட்டு, அவை அமைக்கப்படும். அரசு உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 10 உருது மொழி ஆசிரியா் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்றாா் முதல்வா் ஸ்டாலின்.