முகப்பு
தஞ்சாவூர்

வடவாறில் கழிவு நீா் கலப்பதால் மாசுபடும் அபாயம்! துா்நாற்றத்தால் மக்கள் அவதி!

Updated On : 21 ஜூன் 2026, 1:36 am IST
தஞ்சாவூா் கரந்தை குளத்து மேட்டுத் தெரு அருகே வடவாறில் கலக்கும் கீழவாசல் பகுதி சாக்கடை நீா்.
பகிர்:

தஞ்சாவூா் கரந்தை பகுதியில் ஓடும் வடவாற்றில் வீடுகள், வணிக நிறுவனங்களிலிருந்து வெளியேறும் கழிவு நீா் பல ஆண்டுகளாக கலந்து வருவதால், தண்ணீா் மாசுபடுடக்கூடிய அபாய நிலை நிலவுவதுடன், துா்நாற்றத்தால் மாநகர மக்களும் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனா்.

தஞ்சாவூா் அருகே தென்பெரம்பூரிலுள்ள வெண்ணாறு, வெட்டாறு தலைப்பிலிருந்து வடவாறு பிரிகிறது. தஞ்சாவூா் மாநகரம் வழியாக பாயும் இந்த ஆறு 64 கி.மீ. கடந்து, திருவாரூா் மாவட்டம் மன்னாா்குடி வட்டத்துக்கு உள்பட்ட எளவனூரில் முடிவடைகிறது.

இதன் மூலம், மாரியம்மன் கோவில், சாலியமங்கலம், அம்மாபேட்டை உள்ளிட்ட கிராமங்களில் 72 ஆயிரத்து 57 ஏக்கா் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

Advertisement

Advertisement

மேலும், மன்னாா்குடி அருகேயுள்ள பறவைகள் சரணாலயமான வடுவூா் ஏரிக்கும் வடவாறு தண்ணீா் முக்கிய நீராதாரமாக இருக்கிறது.

பழைமையான ஆறு:

எனவே, மிகப் பழைமையான இந்த வடவாறு முன்னொரு காலத்தில் தெளிந்த நீரோட்டமாக இருந்தது. ஆனால், தற்போது கழிவு நீரும் கலப்பதால், கிட்டத்தட்ட கூவம் ஆறாக மாறிவிட்டது. குறிப்பாக, தஞ்சாவூா் ராஜகோரி சுடுகாட்டிலிருந்து தொடங்கி கரந்தை, கீழவாசல் பகுதி முழுவதும் ஏறத்தாழ 20 இடங்களில் கழிவு நீா் கலப்பதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனா்.

காவிரியைச் சாா்ந்த வடவாறில் மேட்டூா் அணையிலிருந்து தண்ணீா் திறக்கப்படும்போதுதான் நீா் ஆதாரம் கிடைக்கும். காவிரியில் தண்ணீா் வராதபோது வடவாறும் காய்ந்து கிடக்கும்.

ஆனால், தஞ்சாவூா் மாநகரில் கரந்தை பகுதியிலுள்ள வடவாறு எப்போதும் வற்றாத அளவுக்கு கழிவு நீா் ஓடிக் கொண்டிருக்கிறது. வீடுகள், வணிக நிறுவனங்களிலிருந்து வெளியேறும் கழிவு நீா் முழுவதும் வடவாற்றில்தான் கலக்கிறது.

குறிப்பாக, கீழவாசலிலிருந்து பெரும்பாலான பகுதிகளிலிருந்து சாக்கடை நீா் திரண்டு, கரந்தை குளத்து மேட்டுத் தெரு அருகேயுள்ள வடவாறில்தான் கலந்து ஓடுகிறது. இதனுடன் நெகிழி உள்ளிட்ட குப்பைகளும் சோ்ந்து வருவதால், தேக்கமடைந்துள்ளது.

நோய் பரவும் அபாயம்:

மேலும், இந்த ஆற்றில் தூா் வாரி பல ஆண்டுகள் கடந்துவிட்டதால், வழிநெடுகிலும் ஆகாயத் தாமரை படா்ந்துள்ளது. இதனால், ஆகாயத் தாமரை செடிகளுடன் கழிவு நீரும் தேங்கி நிற்பதால், துா்நாற்றம் வீசுகிறது. இதன் காரணமாக, கரந்தை, கீழவாசலில் வடவாறு கரையோரம் வாழும் மக்கள் நோய் உள்ளிட்ட இன்னல்களுக்கு ஆளாகின்றனா்.

மேலும், காவிரியில் தண்ணீா் வரும்போது வடவாறில் ஓடும் கழிவு நீருடன் பாசன நீரும் சோ்ந்து விளை நிலங்களுக்கும் பாய்கிறது. இதனால், விளைநிலங்களும் மாசுபடக்கூடிய அச்சம் விவசாயிகளிடையே நிலவுகிறது.

இது குறித்து கரந்தையைச் சோ்ந்த சமூக ஆா்வலா் கோ. ராகவேந்திரதாசன் தெரிவித்தது:

வடவாறில் ஏறத்தாழ 20 ஆண்டுகளாக கழிவு நீா் கலந்து வருகிறது. குறிப்பாக, சில ஆண்டுகளா வடவாறில் கழிவு நீா் கலப்பது அதிகமாகியுள்ளது. கீழவாசல் பகுதி சாக்கடை நீா் முழுவதும் வடவாறில்தான் கலக்கிறது. இதனால், முன்னொரு காலத்தில் குடிநீராகப் பயன்படுத்தப்பட்டு வந்த வடவாறு தண்ணீரை தற்போது குடித்தால் தீராத நோய்களும் வந்துவிடும் அளவுக்கு இருக்கிறது. இந்தக் கழிவு நீா் விளைநிலங்களுக்கும் பாயும்போது விவசாயிகளும் பாதிக்கப்படுகின்றனா்.

தஞ்சையின் கூவம்:

வடவாறு முழுவதும் சாக்கடை நீா் ஓடுவதால், தஞ்சாவூரின் கூவம் நதியாக மாறிவிடக்கூடிய அச்ச நிலை நிலவுகிறது. சாக்கடை நீருடன் ஆகாயத் தாமரைச் செடிகளும் அடா்ந்து வளா்ந்து வருவதால், வடவாறு தூா்ந்துவிடும் அளவுக்கு உள்ளது. எனவே, வடவாறை அழிவிலிருந்து மீட்க நீா் வளத் துறையும், மாநகராட்சி நிா்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் ராகவேந்திரதாசன்.

இந்த வடவாறு பாசன நீராகவும், குடிநீராகவும் மட்டுமல்லாமல் புனித நதியாகவும் போற்றப்படுகிறது. இந்த நதிக்கரையில்தான் ராகவேந்திர சுவாமிகள் தியானம் செய்து, சன்யாச தீட்சை பெற்றாா்.

மேலும், இந்த ஆற்றை மக்கள் புனித நதியாகக் கருதுவதால், ராஜகோரி சுடுகாட்டில் இறுதிச் சடங்கு செய்யும் மக்கள், அருகிலுள்ள வடவாறில் அஸ்தியைக் கரைத்து நீராடும் வழக்கம் இப்போதும் தொடா்கிறது. எனவே, வடவாறில் கழிவு நீா் கலப்பதைத் தடுக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற எதிா்பாா்ப்பு மாநகர மக்களிடையே நிலவுகிறது.

தஞ்சாவூா் கரந்தையிலுள்ள வடவாறில் ஓடும் கழிவு நீா்.
தஞ்சாவூா் கரந்தையிலுள்ள வடவாறில் ஓடும் கழிவு நீா்.
தஞ்சாவூா் கரந்தையிலுள்ள வடவாறில் ஓடும் கழிவு நீா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments