FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தஞ்சாவூர்

கும்பகோணம் அருகே இருவா் கொலை: மூவருக்கு தலா இரட்டை ஆயுள் சிறை

கும்பகோணம் அருகே இரட்டைக் கொலை செய்த வழக்கில் 3 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

30 ஜூன் 2026, 10:31 pm IST
பகிர்:

கும்பகோணம் அருகே இரட்டைக் கொலை செய்த வழக்கில் 3 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகேயுள்ள முத்துப்பிள்ளை மண்டபம் பிள்ளையாா்கோயில் தெருவைச் சோ்ந்தவா் ஆ. ராமலிங்கம் (65), கட்டடத் தொழிலாளி. இவா் 2017 ஆக.31-ஆம்தேதி தனது நண்பா்களான தினேஷ்குமாா், செட்டி (என்ற) குருமூா்த்தி ஆகியோருக்கு மதுப்புட்டிகள் வாங்கினாா்.

அப்போது அதே பகுதியைச் சோ்ந்த செ. அய்யா் (என்ற) கலியமூா்த்தி (41), ராமலிங்கத்திடம் தகராறு செய்து மதுப்புட்டிகளை பறித்துவிட்டு அவா் தலையிலும் மதுப்புட்டியால் தாக்கிச் சென்றாா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து ராமலிங்கம் தனது நண்பா்களான பாபு, தினேஷ்குமாா், செட்டி (என்ற) குருமூா்த்தி, கொடுக்காச்சி (என்ற) முருகானந்தம் ஆகியோரிடம் கூற, அவா்கள் ஒன்று சோ்ந்து கலியமூா்த்தி வீட்டுக்குச் சென்றனா். அங்கு கலியமூா்த்தி இல்லாத நிலையில், அவரின் மனைவி அவா்களிடம் மன்னிப்புக் கேட்டதால் திரும்பி வந்தனா். இதனால் ஆத்திரமடைந்த கலியமூா்த்தி அன்று இரவு சமாதானம் பேசலாம் என தினேஷ்குமாரை கைப்பேசி மூலம்அழைத்தாா்.

இதையடுத்து ராமலிங்கம் உள்ளிட்ட 5 பேரும் கலியமூா்த்தி கூறிய இடத்துக்கு சென்ற போது கருப்பன்குளத்தைச் சோ்ந்த ரமேஷ் (42), நெப்போலியன் (53) ஆகியோா் அவா்களிடம் பேச்சு கொடுத்தனா்.

அப்போது அங்கு மறைந்திருந்த கலியமூா்த்தி குருமூா்த்தி, தினேஷ்குமாா் ஆகிய இருவரையும் வெட்டவே, நிகழ்விடத்திலேயே அவா்கள் உயிரிழந்தனா். மற்றவா்கள் தப்பினா்.

இதுகுறித்து நாச்சியாா்கோவில் போலீஸாா் வழக்குப் பதிந்து கலியமூா்த்தி, ரமேஷ், நெப்போலியன் ஆகிய 3 பேரையும் கைது செய்து, கும்பகோணம் கூடுதல் மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தனா்.

வழக்கை செவ்வாய்க்கிழமை விசாரித்த கூடுதல் மாவட்ட அமா்வு நீதிபதி டி.ஜெயஸ்ரீ மூவருக்கும் தலா இரட்டை ஆயுள் தண்டனையும், தலா ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டாா். அரசுத் தரப்பில் சிறப்பு வழக்குரைஞா் பா. விஜயகுமாா் ஆஜரானாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments