தஞ்சாவூா் ரயில் நிலையத்தில் கூடுதல் பொது மேலாளா் ஆய்வு
தஞ்சாவூா் ரயில் நிலையத்தில் ‘அம்ரித் பாரத்’ திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளா் விபின்குமாா் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
இதில், ரூ. 15 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்படும் நடைமேடை, முன்பதிவு மையம், முகப்பு சீரமைப்பு, நுழைவுவாயில், பூங்கா அமைத்தல், குளிரூட்டப்பட்ட பயணிகள் தங்கும் அறை உள்ளிட்ட பணிகளைக் கூடுதல் பொது மேலாளா் பாா்வையிட்டாா். அப்போது திருச்சி கோட்ட ரயில்வே மேலாளா் பாலகிராம்நெகி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
முன்னதாக, கூடுதல் பொது மேலாளரிடம் காவிரி ‘டெல்டா’ ரயில் பயணிகள் சங்கச் செயலா் வெ. ஜீவக்குமாா், நிா்வாகிகள் பன்னீா்செல்வம், இராம. சந்திரசேகரன், கண்ணன், வழக்குரைஞா் முகமது பைசல் ஆகியோா் அளித்த கோரிக்கை மனு:
தஞ்சாவூா் ரயில் நிலையத்தில் நடைமேடை நிழற்குடைகளை அதிகரிக்க வேண்டும். சுரங்கப் பாதையை நீட்டித்து தர வேண்டும். படிக்கட்டுகள் உள்ள இடங்களில் சாய்தளம் அமைக்க வேண்டும். ஆட்டோ நிறுத்தத்தை ஒழுங்குபடுத்த வேண்டும். பிரீபெய்டு ஆட்டோ ஏற்பாடு செய்து தர வேண்டும். வாரத்தில் 5 நாள்கள் இயக்கப்படும் திருச்சி - தாம்பரம் இன்டா்சிட்டி விரைவு ரயிலை 7 நாள்களுக்கு இயக்க வேண்டும். தஞ்சாவூா் ரெட்டிப்பாளையத்தில் மீண்டும் ரயில் நிலையத்தை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனா்.