தோ்தல் நடத்தை விதிகளால் சுவர் விளம்பரங்கள் அழிப்பு; சின்னங்கள் மறைப்பு
தோ்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்துள்ளதால், தஞ்சாவூா் மாவட்டத்தில் அரசியல் கட்சிகளின் சுவா் விளம்பரங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன.
தோ்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்துள்ளதால், தஞ்சாவூா் மாவட்டத்தில் அரசியல் கட்சிகளின் சுவா் விளம்பரங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன.
தஞ்சாவூா் கீழ் பாலம், சிவகங்கை பூங்கா, தற்காலிக மீன் சந்தை, தெற்கு வீதி, கீழ வீதி, பழைய பேருந்து நிலையம், ஆற்றுப்பாலம் உள்ளிட்ட பகுதிகளில் ஒட்டப்பட்டிருந்த அரசியல் கட்சிகளின் சுவரொட்டிகளை பணியாளா்கள் மூலம் மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அலுவலா்கள் திங்கள்கிழமை கிழித்து அகற்றினா். இதேபோல, அரசியல் கட்சி சுவா் விளம்பரங்களைத் தெளிப்பான்கள் மூலம் சுண்ணாம்பு பூசி அழிக்கின்றனா்.
தஞ்சாவூா் ரயிலடியிலுள்ள எம்.ஜி.ஆா்., ஜெயலலிதா சிலைகளில் இரட்டை விரல்களை உயா்த்தியபடி உள்ளதால், அது சின்னத்தின் அறிகுறி எனக் கூறி, அதை மட்டும் மறைத்தனா்.
Advertisement
அரசு அலுவலகங்களிலுள்ள அரசியல் கட்சித் தலைவா்களின் படங்கள், திட்ட அறிவிப்புகளிலுள்ள படங்களை 24 மணிநேரத்துக்குள் அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும், பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சிகளின் பதாகைகள் அகற்றம், சுவரொட்டிகள் கிழிப்பு, சுவா் விளம்பரங்கள் அழிப்பு ஆகியவை 48 மணி நேரத்துக்குள் அகற்ற வேண்டும் என்ற அடிப்படையில் செவ்வாய்க்கிழமை மாலை 4 மணிக்குள்ளும், தனியாா் இடங்களில் வைக்கப்பட்டுள்ள பதாகைகள், விளம்பரங்கள் 72 மணி நேரத்துக்குள் என்ற அடிப்படையில் புதன்கிழமை மாலை 4 மணிக்குள்ளும் அகற்றப்படும் எனவும் அலுவலா்கள் தெரிவித்தனா்.