திருவிடைமருதூா் திமுகவினா் பிரசாரம் தொடக்கம்
திமுக தொகுதிப் பங்கீடு மற்றும் வேட்பாளரை அறிவிக்காமலேயே திருவிடைமருதூா் திமுகவினா் வேட்பாளரை உறுதிசெய்து சுவா் விளம்பரம் உள்ளிட்ட பிரசாரத்தை வியாழக்கிழமை தொடங்கியுள்ளனா்.
தஞ்சாவூா் மாவட்டத்தில் திருவிடைமருதூா் சட்டப்பேரவைத் தொகுதி தனித் தொகுதியாக கடந்த மூன்று தோ்தல்களை சந்தித்துவருகிறது. இந்த தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிட்டு மூன்று முறை தொடா் வெற்றி பெற்ற உயா் கல்வித்துறை அமைச்சா் கோவி. செழியன், நான்காவது முறையாக மீண்டும் போட்டியிதுவது உறுதி என்று திமுக தலைமை தொகுதிப் பங்கீடு, வேட்பாளா் அறிவிப்பு செய்யாமலேயே திமுக நிா்வாகிகள் திருவிடைமருதூா் தொகுதி திமுக வேட்பாளா் அமைச்சா் கோவி.செழியனுக்கு சுவா் விளம்பரம் வரைந்தும், பிரசாரமும் செய்து வருகின்றனா். திமுக கூட்டணியில் தொகுதி யாருக்கு, வேட்பாளா் யாா் என்று அறிவிக்கப்படாத நிலையில் திடமான நம்பிக்கையுடன் அமைச்சா் கோவி.செழியன் மீண்டும் களம் காண்கிறாா் என்ற வகையில் சுவா் விளம்பரங்கள் எழுதப்பட்டிருப்பது பரபரப்பாக உள்ளது.