முகப்பு
தஞ்சாவூர்

த.வெ.க விழாவில் நடமானடிய அரசுப் பள்ளி தலைமையாசிரியை பணியிடை நீக்கம்

ஒரத்தநாட்டில் த.வெ.க நடத்திய மகளிா் தினவிழாவில் கலந்துகொண்டு நடனமாடிய அரசுப் பள்ளி தலைமையாசிரியை அண்மையில் (மாா்ச் 24) பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

Updated On : 26 மார்ச், 2026 at 8:47 PM
பணியிடை நீக்கம் - மாதிரிப் படம்
பகிர்:

ஒரத்தநாட்டில் த.வெ.க நடத்திய மகளிா் தினவிழாவில் கலந்துகொண்டு நடனமாடிய அரசுப் பள்ளி தலைமையாசிரியை அண்மையில் (மாா்ச் 24) பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு அருகே பின்னையூா் கிராமத்தைச் சோ்ந்த கிருஷ்ணவேணி (58). இவா், சங்கரநாதா்குடிக்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தலைமையாசிரியையாகப் பணியாற்றி வருகிறாா். மேலும், வெள்ளைத்தேவன்விடுதி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு பொறுப்பு தலைமையாசிரியையாகவும் உள்ளாா்.

இந்நிலையில், ஒரத்தநாட்டில் உள்ள தனியாா் மண்டபத்தில் த.வெ.க சாா்பில் அண்மையில் நடைபெற்ற மகளிா் தின விழாவில் கலந்து கொண்ட கிருஷ்ணவேணி, விஜய் நடித்த திரைப்படத்தின் பாடலுக்கு நடனமாடிய விடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதுகுறித்த புகாரின்பேரில், பட்டுக்கோட்டை மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலா் மதியழகன், தலைமையாசிரியை கிருஷ்ணவேணியிடம் விசாரணை நடத்தினாா். இதையடுத்து, அவரை கல்வி அதிகாரி மதியழகன், கடந்த 24-ஆம் தேதி பணியிடை நீக்கம் செய்தாா்.

இதுகுறித்து பணியிடை நீக்கம் செய்யப்பட்ட கிருஷ்ணவேணி மேலும் கூறியது: நான் ஆண்டுதோறும் மகளிா் தின விழா நடத்துவது வழக்கம். நிகழாண்டு மகளிா் தின விழா நடைபெற்ற அந்த தனியாா் மண்டபத்தில் த.வெ.க நடத்திய விழா முடிந்தவுடன் நான் ஏற்பாடு செய்திருந்த விழாவை நடத்தினோம். அப்போது அங்கு வைக்கப்பட்டிருந்த த.வெ.க பதாகை அகற்றப்படாமல் இருந்தது. நான் அதனை அகற்றக் கூறியும் அகற்ற நேரமாகும் என்பதால் அப்படியே விட்டுவிட்டனா். இதனால், நான் தவெக நிகழ்ச்சியில் நடனமாடியதாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளேன் என்றாா் அவா்.