திருச்சி

சீரழிவில் பூம்புகார் சிலப்பதிகார கலைக்கூடம்

பண்டையத் தமிழர்கள் வரலாற்றின் நிகழ்கால அடையாளமாகக் கருதப்படும் பூம்புகார் சிலப்பதிகார கலைக்கூடம் சீரழிவை எதிர்கொண்டிருப்பது தமிழார்வலர்களுக்கும், சுற்றுலாப் பயணிகளுக்கும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி

பண்டையத் தமிழர்கள் வரலாற்றின் நிகழ்கால அடையாளமாகக் கருதப்படும் பூம்புகார் சிலப்பதிகார கலைக்கூடம் சீரழிவை எதிர்கொண்டிருப்பது தமிழார்வலர்களுக்கும், சுற்றுலாப் பயணிகளுக்கும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

கல்தோன்றி மண்தோன்றா காலத்தே முன்தோன்றிய மூத்தக் குடியான தமிழ்க் குடியின் தொன்மையான நாகரிகத்தைப் பறைசாற்றும் தொல்லியல் எச்சங்களின் உறைவிடமாக விளங்குமிடம் பூம்புகார். நாகை மாவட்டம், சீர்காழி வட்டத்துக்குள்பட்ட பூம்புகார், தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களுள் ஒன்றாகவும் விளங்குகிறது.

ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்றான சிலப்பதிகாரத்தின் நாயகன் கோவலன், காப்பிய நாயகி கண்ணகி ஆகியோர் வாழ்ந்த இடம், பண்டைய சோழர்களின் தலைநகராவும், துறைமுக நகரமாகவும், சர்வதே சந்தையாகவும் விளங்கிய இடம், குடகுமலையில் தோன்றி தமிழகத்தில் தவழும் காவிரி, கடலில் சங்கமமாகும் இடம் என எண்ணற்ற சிறப்புகளை உள்ளடக்கிய ஊர் பூம்புகார்.

தமிழகத்தின் தொன்மை நாகரிகத்தில் பூம்புகார் பெற்றிருந்த சிறப்பையும், சிலப்பதிகார நிகழ்வுகளையும் வருங்கால சந்ததிக்கும் கொண்டு சேர்க்கும் நோக்கில், 1973-ல் தமிழக அரசால் பூம்புகாரில் அமைக்கப்பட்டது சிலப்பதிகார கலைக்கூடம்.

கோவலன்- கண்ணகி வாழ்வியலை உணர்த்தும் புடைப்புச் சிற்பங்களையும், பண்டையத் தமிழர்களின் பயன்பாட்டிலிருந்த யாழ் உள்ளிட்ட இசைக் கருவிகளையும், சிலப்பதிகாரம் இயற்றிய இளங்கோவடிகள் மற்றும் கல்லணை அமைத்த கரிகால் சோழன் ஆகியோரின் சிலைகளையும் உள்ளடக்கிய கலைப் பொக்கிஷமாக உருவாக்கப்பட்டது இந்தக் கலைக்கூடம்.

சிலப்பதிகார காப்பியத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பாவை மன்றம், இலஞ்சி மன்றம், நெடுங்கல் மண்டபம், கொற்றைப் பந்தல் உள்ளிட்டவைகளும், கலைக்கூடத்துக்கு அருகிலேயே அமைக்கப்பட்டது. அதனுடன், சுற்றுலா வரும் இளைஞர்களின் பொழுது போக்குக்காக சிறுவர் பூங்காவும் இப்பகுதியில் அமைக்கப்பட்டது. சுற்றுலாப் பயணிகள் தங்கியிருந்து பூம்புகாரின் அழகைக் காண்பதற்காக கிளிஞ்சல் வடிவத்திலான சிறு குடில்கள், சுற்றுலாப் பயணியர் விடுதி என அனைத்து அம்சங்களையும் கொண்ட பூம்புகார் சிலப்பதிகார கலைக்கூட வளாகம் தற்போது சீரழிவின் உச்சத்தில் உள்ளது.

இங்கு ஆண்டு தோறும் கொண்டாடப்படும் இந்திர விழாவை ஏதோ ஓர் காரணத்தால் அரசுகள் தொடர்ந்து புறக்கணித்து வந்த நிலையில், சிலப்பதிகாரக் கலைக்கூடம் மற்றும் பாவை மன்றம், இலஞ்சி மன்றம் உள்ளிட்டவைகளின் பராமரிப்பையும் கைவிட்டுள்ளது சுற்றுலாத் துறை.

இங்குள்ள கிளிஞல் வீடுகள் முழுமையாக சிதிலமடைந்து அழியத் தொடங்கியுள்ளன. கலைக்கூட வளாகம் முழுவதும் களைகளால் நிரம்பியுள்ளன. சிறுவர் பூங்காவின் பிரதான வாயில் பகுதியை குப்பைகள் ஆக்கிரமித்துள்ளன. காதலர்களுக்கும், சமூக விரோதிகளுக்கும் புகலிடமாக மாறி வருகிறது இந்தப் பூங்கா.

சிலப்பதிகார கலைக்கூட வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த செயற்கை நீரூற்றின் செயல்பாடு தடைபட்டு அந்த இடம், இலவச கழிப்பறையைப் போன்று காட்சியளிக்கிறது. நெடுங்கல் மண்டபம், இலஞ்சி மன்றம் உள்பட அனைத்துப் பகுதிகளிலும் இதே நிலையே காணப்படுகிறது. மேலும், ஆங்காங்கே குவிந்து கிடக்கும் மதுபாட்டில்கள், தண்ணீர் கப்புகள் காண்போரை முகம் சுளிக்கச் செய்வதுடன், பீதியையும் ஏற்படுத்துவதாக உள்ளது.

கடந்த சில நாள்களுக்கு முன்பு கர்நாடகா மாநிலத்திலிருந்து பூம்புகாருக்கு சுற்றுலா வந்த சிலரின் குழந்தைகள், இங்குள்ள நீச்சல் குளத்தில் குதித்துக் குளிக்க முயன்ற போது, நீச்சல் குளத்துக்குள் மூழ்கிக் கிடந்த மதுபாட்டில்கள் குத்தி காயங்களுடன் தப்பியுள்ளனர். இதனால், அவர்கள் பெரும் மன உளைச்சலுடன் வெளியேறியுள்ளனர்.

தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களுள் ஒன்றாக விளங்கும் பூம்புகாரில், சுற்றுலாப் பயணிகளுக்குக் கழிப்பறை வசதிக் கூட இல்லை என்பதும், பாவை மன்றம், இலஞ்சி மன்றம், சிறுவர் பூங்கா உள்ளிட்ட பகுதிகளில் மின் விளக்குகளும் சரிவர எரிவதில்லை என்பதும் வேதனைக்குரியது. இந்தச் சீரழிவுகளுக்கு மெüன சாட்சி போல, கடலை நோக்கி நிலையிலிருக்கும் கண்ணகி சிலையும், கவனிப்பாரற்ற நிலையிலேயே உள்ளது.

மெசப்படோமிய நகர நாகரிகத்துக்கு முன்பட்டது தமிழர்களின் நகர நாகரிகம் என்பது பூம்புகார் கடலாய்வில் கிடைக்கும் தொல்லியல் எச்சங்கள் மூலம் தெரியவருகிறது என இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த கடலாய்வாளர்கள் வியந்து வரும் நிலையில், சுற்றுலாத் துறையின் கவனிப்பாரற்றப் போக்கால் களையிழந்து வருகிறது கலைக்கூடமும் அதைச் சார்ந்த வரலாற்றுச் சின்னங்களும்.

ஒரு சுற்றுலாப் பயணியின் வருகையால், உள்ளூரைச் சேர்ந்த 4 பேருக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் பணி வாய்ப்புக் கிடைப்பதாக புள்ளியியல் விவரங்கள் குறிப்பிடும் நிலையில், பூம்புகாரைப் பொலிவுப் பெறச் செய்து, சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் ஏற்பாடுகளுக்கு சுற்றுலாத் துறையும், மாவட்ட நிர்வாகமும் கவனம் செலுத்தாமலிருப்பது வியப்பையும், வேதனையையும் ஏற்படுத்துகிறது என்கின்றனர் தமிழார்வளர்கள்.

இது குறித்து தமிழக அரசு சிறப்பு கவனம் செலுத்தி, பூம்புகார் சிலப்பதிகார கலைகூடம் மற்றும் அதனைச் சார்ந்த பாவை மன்றம், இலஞ்சி மன்றம் உள்ளிட்டவைகளை சீரமைக்க வேண்டும் என்பது தமிழார்வளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் எதிர்பார்ப்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஒற்றுமைச் சிலையை வடிவமைத்த பிரபல சிற்பி ராம் சுதாா் காலமானாா்

டாக்காவில் மீண்டும் விசா மைய பணிகளைத் தொடங்கியது இந்தியா: வேறு இரு இடங்களில் பணி நிறுத்தம்

5 உயா்நீதிமன்றங்களுக்குப் புதிய தலைமை நீதிபதிகள்: கொலீஜியம் பரிந்துரை

புதிய ஊரக வேலைத் திட்ட மசோதாவுக்கு ஒப்புதல்: மக்களவையில் நகலைக் கிழித்து எதிா்க்கட்சியினா் அமளி

திருவள்ளுவா் பல்கலை. மண்டல தடகளப் போட்டி: ஆட்சியா் தொடங்கிவைத்தாா்

SCROLL FOR NEXT