சமயபுரம் மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. தேரோட்டம் ஏப்ரல் 17ஆம் தேதி நடைபெற உள்ளது.
திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. தேரோட்டம் ஏப்ரல் 17ஆம் தேதி நடைபெற உள்ளது.
ஆண்டுதோறும் சித்திரை மாதம் முதல் வாரத்தில் தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். அதன்படி வருகிற 17ஆம் தேதி தேரோட்டம் விமரிசையாக நடைபெற இருக்கிறது. அதையொட்டி ஞாயிற்றுக்கிழமை (ஏப்.8) நடைபெற்ற சித்திரை திருவிழா கொடியேற்றத்தை முன்னிட்டு காலை 6.30 மணிக்கு அம்மன், கொடி மரத்துக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து காலை 8 மணிக்கு மேஷ லக்னத்தில் கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டது.
மண்ணச்சநல்லூர் சட்ட ப்பேரவை உறுப்பினர் பரமேஸ்வரி முருகன், கோயில் இணை ஆணையர் சி. குமரதுரை, பக்தர்கள் திரளானோர் பங்கேற்றனர். இரவு அம்மன் கேடயத்தில் புறப்பட்டு திருவீதி உலா நடைபெற்றது.
திங்கள்கிழமை (ஏப்.9) இரவு அம்மன் சிம்ம வாகனத்தில் திருவீதியுலா நடைபெற உள்ளது. விழாவின் அடுத்தடுத்த நாள்களில் அன்னம், ரிஷபம், யானை, வெள்ளி குதிரை வாகனங்களில் அம்மன் எழுந்தருளி திருவீதி உலா நடைபெற இருக்கிறது. ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் சி. குமரதுரை, பணியாளர்கள் செய்து வருகின்றனர்.தேரோட்டம் நடைபெறும் நாளில் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.