பல்கலை., கல்லூரிகளில் புகார் குழு அமைக்க வலியுறுத்தல்
பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் புகார் குழு அமைக்க வேண்டும் என்று தமிழ்நாடு பல்கலைக்கழக ஆசிரிய சங்கங்களின் கூட்டமைப்பு (டான்பியூபா) வலியுறுத்தியுள்ளது.
பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் புகார் குழு அமைக்க வேண்டும் என்று தமிழ்நாடு பல்கலைக்கழக ஆசிரிய சங்கங்களின் கூட்டமைப்பு (டான்பியூபா) வலியுறுத்தியுள்ளது.
திருச்சியில் சனிக்கிழமை இக்கூட்டமைப்பின் தலைவர் அருள்அறம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் பேராசிரியை நிர்மலாதேவி தொடர்பான வழக்கில் தொடர்புடைய மற்றவர்களையும் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் உயர்நிலைக் குழு அமைக்க வேண்டும்.
பல்கலைக்கழகங்களில் காலியாக உள்ள ஆட்சிமன்றக் குழு, பேரவைக் குழு இடங்களை விரைவில் நிரப்ப வேண்டும். பல்கலைக்கழகங்களில் நடைபெறும் பெண்கள் தொடர்பான பிரச்னைகளை முன்னெடுத்து பிரதிநிதித்துவப்படுத்த ஆட்சிமன்றக் குழுவில் தேர்தல் மூலமாக தேர்ந்தெடுக்கப்படக்கூடிய பெண்களுக்கான தனித்தொகுதியை ஏற்படுத்த வேண்டும்.
பல்கலைக்கழகங்களில் ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களை எக்காரணம் கொண்டு உறுப்புக் கல்லூரிக்கு இடமாற்றம் செய்யக்கூடாது. தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களின் இடமாற்றத்துக்கான நெறிமுறைகளை வகுக்க வேண்டும்.
பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகளை நிறைவேற்றித் தர வேண்டும்.
பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்களைத் தடுப்பது மற்றும் முறையிடுவதற்கான சட்டம் 2013-ன்படி, பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் புகார் குழுக்களை ஏற்படுத்த வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் வகையில் ஜாக்டோ- ஜியோவுடன் இணைந்து செயல்படுவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டமைப்புத் துணைத் தலைவர் எஸ். சுபா, செயலர் கே. சதாசிவம், இணைச் செயலர் என். பிரசன்னா, பொருளாளர் ஆர். மகேந்திரன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்று பேசினர்.