முகப்பு
திருச்சி

வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தப்பணி: புதிய வாக்காளர்களை சேர்க்க ஆர்வம் காட்டிய அரசியல் கட்சிகள்

திருச்சி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தப் பணியில்

Updated On : 8 அக்டோபர் 2018, 8:54 am IST
பகிர்:

திருச்சி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தப் பணியில், புதிய வாக்காளர்களைச் சேர்க்கும் நடவடிக்கையில் அரசியல் கட்சியினர் ஆர்வம் காட்டினர்.
மாவட்டத்தில் உள்ள 9 பேரவைத் தொகுதிகளில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தப் பணி அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நடைபெற்று வருகிறது. அக்.31ஆம் தேதி வரை நடைபெற உள்ள இப்பணியில் புதிய வாக்காளர்களைச் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
ஏற்கெனவே 2 சிறப்பு முகாம்கள் நடைபெற்ற நிலையில், மற்றொரு சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது.
2019, ஜனவரி 1ஆம் தேதியன்று 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் வாக்காளர் பட்டியலில் சேர தகுதி உடையவர்கள் என்பதால், வயதுக்குரிய சான்றை காண்பித்து, படிவம் 6  -யை பூர்த்தி செய்து இளம் வாக்காளர்கள் அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்ததால், தங்கள் பகுதியிலுள்ள வாக்குச்சாவடிக்குச் சென்று இளைஞர்கள் பலர் படிவங்களைப் பூர்த்தி செய்து அளித்தனர். 
இதுதவிர, பெயர் திருத்தம், முகவரி மாற்றம் போன்றவற்றுக்கான படிவங்களையும் பலர் அளித்தனர்.
மேலும், அரசியல் கட்சியினர் தங்கள் பகுதி வாக்குச் சாவடிகளில் நீக்கம் செய்யப்பட வேண்டியவர்கள் பெயரை நீக்கம் செய்வதற்கான பணிகளை மேற்கொண்டதோடு, புதிய வாக்காளர்களை பட்டியலில் சேர்க்கும் நடவடிக்கையில் தீவிரம் காட்டினர். 
உறையூர் எஸ்.எம்.மேல்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சிறப்பு முகாமை திமுக துணைப் பொதுச் செயலாளர் வி.பி.துரைசாமி, சட்டப்பேரவை உறுப்பினரும், தெற்கு மாவட்ட திமுக செயலருமான கே.என்.நேரு உள்ளிட்டோர் பார்வையிட்டு, கட்சியினர் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனைகளை வழங்கினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.