திருச்சி, புதிய வகை பறவைகள், வாத்துகள், வண்ணத்துப்பூச்சிகளின் புகலிடமாய் திகழ்கிறது. ஆனால், அரியவகை விலங்கான தேவாங்கு அழியும் நிலையில் இருப்பதும் தெரிய வந்துள்ளது.
மாநிலத்தின் மையப்பகுதியாகத் திகழும் திருச்சி மாவட்டம் வரலாற்று ரீதியாகவும், ஆன்மிக ரீதியாகவும் பல்வேறு சிறப்புகளைக் கொண்டது. திருச்சி, பெரம்பலூர், சேலம் என 3 மாவட்டங்களை உள்ளடக்கிய பச்சமலை, புளியஞ்சோலை போன்ற வனம் சார்ந்த சுற்றுலாப் பகுதிகளைக் கொண்டிருக்கிறது. இதைத் தவிர, வண்ணத்துப்பூச்சிகளுக்கான பூங்காவை கொண்டிருக்கும் மாவட்டமாகவும் உள்ளது.
இதுபோன்று பல்வேறு சிறப்புகளைக் கொண்டுள்ள திருச்சி மாவட்டத்துக்கு வெளிநாட்டுப் பறவைகள், வாத்துகள், பல்வேறு வகையான வண்ணத்துப்பூச்சிகள் அதிகளவில் வந்திருக்கின்றன என்பது ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. அதுபோல, சில அழியும் நிலையில் உள்ள தேவாங்கை காப்பாற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் வனம் சார்ந்த சமூக ஆர்வலர்களால் எழுப்பப்பட்டுள்ளன.
திருச்சியில் காவிரி, கொள்ளிடம் ஆறுகளும், மாவட்டத்தின் புறநகர்ப் பகுதிகளில் அதிகளவில் இருக்கும் ஏரிகள் போன்ற நீர்நிலைகள் அதிகளவில் அமைந்திருப்பது பறவைகளும், வாத்துகளின் வருகைக்கு காரணமாக இருக்கிறது. தொடர்ந்து வரும் ஆண்டுகளிலும் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதுபோல, மேற்குத் தொடர்ச்சிமலையின் தொடர்ச்சியாகவே மணப்பாறை, துவரங்குறிச்சிப் பகுதிகளில் உள்ள மலைக்காடுகள், பச்சமலைப் பகுதி போன்ற இடங்களில் சில வன விலங்குகளும் வந்து செல்லும் பகுதியாகத் திகழ்கின்றன.
என்ன என்ன வகைகள் : திருச்சியில் பிஷப் ஹீபர் கல்லூரி மாணவர்கள் மேற்கொண்ட தொடர்ந்து ஆய்வுகளின்படி, 300 வகையான பறவைகள் திருச்சி சுற்றுப்புறப் பகுதிகளுக்கு வந்து செல்கின்றன என்பதும், அவற்றில்100-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு வகை பறவைகள் என்பதும் தெரிய வந்திருக்கிறது. இதுபோல, 116 வகையான வாத்து வகைகளும் திருச்சி பகுதிக்கு புதிய வரவாகக் கூறப்படுகிறது. அவற்றில் முக்கியமானவை அகப்பைவாயன் வாத்து, வரித்தலை வாத்து, வாணநாரை வாத்து ஆகியவற்றை குறிப்பிடலாம்.
இதுபோல, திருச்சி மாவட்டத்தின் மணப்பாறை, துவரங்குறிச்சி வனப்பகுதிகளில் பைசன் எனப்படும் காட்டுமாடு வகைகளும், புள்ளிமான், சறுகுமான், கேழையாடு போன்ற அரியவகை மான் இனங்களும் காணப்படுகின்றன. இதுபோல, பச்சமலை பகுதியில் கரடி நடமாட்டம் காணப்படுவதாகவும், அதற்கான எச்சங்கள் காணப்படுகிறது. இதைத் தவிர மலைப்பகுதிகளில் அரியவகை காட்டுப்பூனைகள், கீரிப்பிள்ளை, மலைப் பகுதிகளில் மட்டும் காணப்படும் மலை அணில், திருச்சி ஸ்ரீரங்கத்திலிருந்து மேலூர் செல்லும் சாலையில் அரியவகையிலான பழந்தின்னி வெளவால் போன்றவையும் காணப்படுவதாகவும் ஆய்வுகளின் வழியாகத் தெரிய வந்திருக்கிறது.
அழியும் நிலையில் தேவாங்கு...
பொதுவாக திருச்சியில் என்ன விலங்குகள், பறவைகள் இருந்துவிடப் போகிறது என்பார்கள். ஆனால் அவ்வாறு கூறுவது தவறு என்பது எங்கள் கல்லூரி மாணவர்கள் மேற்கொண்ட ஆய்வின் மூலமாகத் தெரிய வந்திருக்கிறது. 2 ஆண்டுகளுக்கும் மேலாக மாணவர்கள் தொடர்ந்து மேற்கொண்ட ஆய்வில் திருச்சி மாவட்டம் வனவிலங்குகளை குறிப்பிட்ட அளவில் கொண்டிருக்கும் மாவட்டமாகத் திகழ்கிறது என்பது தெரிய வந்திருக்கிறது.
குறிப்பாக, திருச்சி மாவட்டத்தின் மலைப் பகுதிகளில் அழியும்நிலையில் உள்ள தேவாங்கு காணப்படுகிறது. குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே உள்ள இந்த தேவாங்கு வகை இன்னும் சில காலங்களில் இல்லாமல் கூட போய்விடலாம். எனவே இதுபோன்ற விலங்குகளைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். புறநகர்ப் பகுதிகளைக் காட்டிலும், மிகுந்த மக்கள் நடமாட்டம் கொண்ட மாநகரப் பகுதியில் 25 ஏக்கர் பரப்பளவைக் கொண்டு அமைந்துள்ள, எங்கள் கல்லூரி வளாகத்திலேயே 56 வகை பறவைகள், 7 வகையான தவளை வகைகள், 76 வகையான வண்ணத்துப்பூச்சிகள் இருப்பது கண்டறியப்பட்டிருக்கின்றன என்கிறார் திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியின் சமூகப்பணித் துறைத் தலைவரும், வனத்துறையின் கௌரவ வன உயிரினக் காப்பாளருமான ஏ. ரெல்டன்.
இவ்வாறு புதிய வகையிலான பறவைகள், வாத்துகள் வந்து செல்லும் நிலையில் அதுகுறித்த ஆவணங்களைப் பதிவு செய்வதற்கும், அழியும் நிலையிலுள்ள தேவாங்கு போன்ற அரியவகை வனவிலங்குகளைப் பாதுகாப்பதற்கும் உரிய நடவடிக்கை எடுப்பதுடன், பொதுமக்களும் இதற்கு தங்கள் ஒத்துழைப்பை அளிக்க வேண்டும் என்கிறார் ரெல்டன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.