முகப்பு
திருச்சி

இலக்கியங்களின் சிறப்பு, தொன்மையை உணர வேண்டும்

நம்முடைய இலக்கியங்களின் சிறப்பை, தொன்மையை நாம் உணர வேண்டும் என்றார் செம்மொழித் தமிழாய்வு நடுவண் நிறுவனத்தின் ஆய்வறிஞர்

Updated On : 28 அக்டோபர் 2018, 3:11 am IST
பகிர்:


நம்முடைய இலக்கியங்களின் சிறப்பை, தொன்மையை நாம் உணர வேண்டும் என்றார் செம்மொழித் தமிழாய்வு நடுவண் நிறுவனத்தின் ஆய்வறிஞர் முனைவர் ப. மருதநாயகம்.
திருச்சியில் சிந்தனைத்தளம் அமைப்பு சார்பில் சனிக்கிழமை நடைபெற்ற தொடர் பொழிவில் பங்கேற்று, அறநெறிக் கருத்துகள்- வள்ளுவரும், வடநூலாரும் என்ற தலைப்பில் மேலும் அவர் பேசியது:
தமிழ் அற இலக்கியங்கள் அளவிலும், தரத்திலும் சிறப்பு பெற்று விளங்கியிருக்கின்றன. ஆனால், வடமொழி நூல்கள் தமிழ்மொழிக்கு முந்தையவை எனக் கூறி செய்யப்பட்ட மோசடிகள் தற்போது வெளிச்சத்துக்கு வந்திருக்கின்றன. இந்த மோசடிகளுக்கு நம்மவர்களும் துணைபுரிந்திருக்கின்றனர்.
தமிழ் நூல்களுக்கான காலங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. வடமொழி நூல்களுக்கான காலத்தை நிர்ணயம் செய்யாமல் பழைய காலத்தையே கூறிவந்தார்கள். இப்போதுதான் வடமொழி நூல்களுக்கான காலத்தைக் கூறி வருகின்றனர். நூல்களுக்கான காலத்தைத் தெரியாமல் எப்படி முடிவு செய்ய முடியும்.
மொழி, நடை, உரையாடல் போன்றவற்றை கொண்டு எது மூலம், எது கடன் வாங்கப்பட்டவை என்பது ஆராய்ந்து பார்த்தால், இயல்பான தன்மையில் கருத்துச் செறிவுடைய திருக்குறள்தான் மூலம் என்றும், மற்றவை எல்லாம் இதிலிருந்து கடன் வாங்கப்பட்டவை என்பது தெரிய வருகிறது என்று போப் அடிகளார் கூறியிருக்கிறார்.
அஃதிணைப் பொருள்களை தூதுவாக அனுப்பியதாக தமிழ் இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. நற்றிணையிலும், சிலப்பதிகாரத்திலும் தூது தொடர்பான பாடல்கள் உள்ளன. காலம் தெரியாத காலத்தில் அற உணர்வையும், மரபையும் வைத்துதான் முடிவு செய்வார்கள். அந்தவகையில் பார்க்கும் போது வடமொழியில் அற உணர்வுகள் என்பது கிடையாது.
கீதையும், குறளும் செயல் முழு வாழ்வை அறத்தோடு தொடர்புபடுத்துகிறது. வாழ்க்கை ஏற்பை முன்னிறுத்துகின்றன. பேரறிவுடைய கொள்கைகளின் தொகுப்பை வேறு எங்கும் காணமுடியாது. தமிழரின் அற உணர்வையும், வடமொழி நூலாரின் அற உணர்வும் எத்தகையது என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். மேலும், அற இலக்கியத்துக்கு ஏற்றவாறு வெண்பாக்களும் அமைந்திருக்கின்றன.
மொழி, இலக்கியம், இனம், மரபு ஆகியவற்றை வாழ்க்கையோடு ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். தமிழ் இலக்கியங்கள் பழைமையானவை. வடமொழி இலக்கியங்கள் காலத்தால் பிந்தியவையாகும். திருக்குறள்தான் மூலம். மற்றவை எல்லாம் அதற்குப் பின்னால்தோன்றியவையாகும். நம்முடைய இலக்கியங்கள் பல்வேறு வகையில் சிறந்தவையாகும். அதன் சிறப்பையும், தொன்மையும் நாம் முதலில் உணர்ந்திட வேண்டும். நாம் மட்டும் உணர்வு கொண்டால்போதாது. மற்றவர்களும் அந்த உணர்வைக் கொள்ள வேண்டும் என்றார் மருதநாயகம்.
கூட்டத்துக்கு அருள்தந்தை முனைவர் அமுதன் அடிகள் தலைமை வகித்தார். கூட்ட நோக்கவுரையை இலக்கிய விமர்சகர் வீ.ந.சோமசுந்தரமும், அறிமுகவுரையை திருக்குறள் சு. முருகானந்தமும் வழங்கினர். முன்னதாக குறள்மொழி வரவேற்றார்.
கூட்டத்தில் சிந்தனைத் தளம் அமைப்பின் ம. செல்வராசு, நாவை.சிவம், பேராசிரியர்கள் கு. திருமாறன், செயலாபதி, சதீஷ்குமரன், பைந்தமிழ் இயக்கத்தின் இயக்குநர் பழ. தமிழாளன், திருச்சி அறிவாளர் பேரவைப் பொருளாளர் ச. சண்முகநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.