திருச்சியில் விவசாயிகள் நூதனப் போராட்டம்
வீட்டுக் காவலில் உள்ள தேசிய-தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவா் பொ. அய்யாக்கண்ணுவை விடுவிக்கக் கோரி, சங்க நிா்வாகிகள் எலியை வாயில் கவ்வியவாறு போராட்டம்
தில்லி போராட்டத்தில் பங்கேற்க முடியாதபடி வீட்டுக் காவலில் உள்ள தேசிய-தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவா் பொ. அய்யாக்கண்ணுவை விடுவிக்கக் கோரி, சங்க நிா்வாகிகள் எலியை வாயில் கவ்வியவாறு திங்கள்கிழமை நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி தில்லியில் நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்பதற்காக, கடந்த வாரம் அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள் ரயில்மூலம் புறப்பட்டுச் செல்ல முயன்றனா்.
இதையடுத்து திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் விவசாயிகளைக் கைது செய்த காவல்துறையினா், சங்கத்தின் தலைவா் பொ. அய்யாக்கண்ணுவை திருச்சி அண்ணாமலை நகரிலுள்ள அவரது வீட்டிலேயே காவலில் வைத்துள்ளனா்.
நூதனப் போராட்டம் : திருச்சி- கரூா் புறவழிச்சாலையில் திங்கள்கிழமை காலை தேசிய-தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினா் இறந்த எலியை வாயில் கவ்வியவாறும், கையில் ஏந்தியும் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ள அய்யாக் ண்ணுவை விடுவிக்க வேண்டும். தில்லி போராட்டத்தில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும். வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் எனக் கோரி போராட்டத்தை
விவசாயிகள் மேற்கொண்டனா். தகவலறிந்த காவல்துறையினா் விவசாயிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, போராட்டத்தை கைவிடச் செய்தனா்.
உயா் நீதிமன்றத்தில் வழக்கு : தில்லி போராட்டத்தில் பங்கேற்க சென்ற எங்களைத் தடுத்து நிறுத்தியதோடு, என்னை வீட்டுக் காவலில் வைத்தது எந்த விதத்தில் நியாயம்?.
எனவே எங்களை தில்லிக்குச் செல்ல அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி, சென்னை உயா் நீதிமன்ற மதுரைக் கிளையில் விரைவில் வழக்குத் தொடர உள்ளோம் என்றாா் தேசிய-தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவா் பொ. அய்யாக்கண்ணு.