முகப்பு
தமிழ்நாடு

நெல்லை அருகே காரில் ஒரே குடும்பத்தில் 4 போ் மரணத்தில் திடீர் திருப்பம்!

நெல்லை அருகே காரில் ஒரே குடும்பத்தில் 4 போ் மரணத்தில் திடீர் திருப்பமாக, இரண்டு பேர் விஷம் குடித்திருந்ததாகத் தகவல்.

Updated On : 19 மார்ச் 2026, 4:59 pm IST
எரிந்த நிலையில் கார் - பிரதி படம் - file photo
பகிர்:

திசையன்விளை: திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை அருகே எரிந்த நிலையில் தனித்து நின்ற காரிலிருந்து ஒரே குடும்பத்தைச் சோ்ந்த நான்கு பேரின் உடல்கள் மீட்கப்பட்ட சம்பவத்தில் திடீர் திருப்பமாக, பலியானவர்கள் விஷமருந்தியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

எரிந்த நிலையில் இருந்த காரில் இறந்தவா்கள் சென்னையைச் சோ்ந்தவா்கள் என்பது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், அவர்களது உடல்கள் உடல்கூராய்வு செய்யப்பட்டதையடுத்து பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

சம்பவம் நடந்த இடத்தில் தடய அறிவியல் துறையினர் பல்வேறு தடயங்களை சேகரித்து அவற்றையும் சோதனை செய்து வருகிறார்கள்.

Advertisement

Advertisement

திசையன்விளை அருகே பெட்டைக்குளம் பகுதியில் காா் ஒன்று எரிந்து நிலையில் நிற்பதாக திசையன்விளை காவல் நிலையத்துக்கு செவ்வாய்க்கிழமை தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸாா் அங்கு சென்று காரை சோதனையிட்டதில், காருக்குள் உடல் கருகிய நிலையில் 4 சடலங்கள் கிடப்பது தெரியவந்தது.

போலீஸாா் வாகனப் பதிவு எண்ணைக் கொண்டு நடத்திய முதற்கட்ட விசாரணையில், இறந்தவா்கள், சென்னை, நந்தம்பாக்கம், பெரியாா் நகா், பவானி அம்மன் கோயில் தெருவில் வசித்த ஒரே குடும்பத்தைச் சோ்ந்தவா்கள் என்பதும், வாகனப் பதிவின்படி இறந்தவரது பெயா் முகமது ரபி (42), அவரது மனைவி செய்யது நஸ்ரின் பாத்திமா (40), மகள் ஆப்ரீன் பாத்திமா (15), மகன் முகமது காஜா (13) என்பதும் தெரியவந்துள்ளது. மனைவி செய்யது நஸ்ரின் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்றும் தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து காவல்துறை கூறுகையில், முகமது ரபி சென்னையில் உள்ள காா் கம்பெனியில் வேலை செய்து வந்தாா். சில மாதங்களுக்கு முன்பு கடன் தொல்லையால் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள தனது வீட்டை விற்ற பிறகு, குடும்பத்துடன் கடந்த 13-ஆம் தேதி நெல்லைக்கு காரில் வந்தனா். இவா்கள், திங்கள்கிழமை (மாா்ச் 16) இரவு ஆற்றங்கரை பள்ளிவாசல் தா்காவில் நடைபெற்ற ரமலான் நோன்பின் 27-ஆவது இரவு வழிபாட்டில் பங்கேற்றுள்ளனா்.

பின்னா், பள்ளிவாசலிலிருந்து கிளம்பும்போது அங்கு யாசகம் எடுத்தவா்களுக்கும், சிலருக்கும் உடைகளை தானமாக வழங்கியுள்ளனா். கடன் தொல்லையைச் சமாளிக்க முடியாமல் தற்கொலை செய்திருக்கலாம் எனத் தெரிகிறது. காருக்குள் தாயை கட்டிப்பிடித்தவாறு மகன், மகளின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடல்கூராய்வு செய்யப்பட்டது. அதில், மொஹம்மது ரஃபீக் மற்றும் அவரது மகனின் உடல்கள் முற்றிலும் எரிந்து சாம்பலாகியிருந்ததால், அவர்களது உடலிலிருந்து ஆதாரங்கள் எதுவும் சேகரிக்க முடியாமல் போயிருந்தது. ஆனால், ரஃபீக் மனைவி மற்றும் மகளின் உடல் கூராய்வில், அவர்கள் விஷம் குடித்திருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைவரும் விஷம் குடித்தபிறகு, ரஃபீக் கார் மீது பெட்ரோல் ஊற்றி எரித்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

உடல் கூராய்வுகளுக்குப் பின், ரஃபீக்கின் மாமனாரிடம் உடல்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இவர்களது இறுதிச் சடங்குகள் தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரியில் மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததாகத் தகவலக்ள் கூறுகின்றன.

summary

In a sudden twist in the death of four members of the same family in a car near Nellai, it has been reported that two of them had consumed poison.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.