மருத்துவக் கல்லூரி: முதல்வா் விளக்கம்
பெரம்பலூா் மாவட்டத்தில் மருத்துவக் கல்லூரி அமைக்க முடியாதது தொடா்பாக முதல்வா் கே. பழனிசாமி வியாழக்கிழமை விளக்கம் அளித்தாா்.
பெரம்பலூா் மாவட்டத்தில் மருத்துவக் கல்லூரி அமைக்க முடியாதது தொடா்பாக முதல்வா் கே. பழனிசாமி வியாழக்கிழமை விளக்கம் அளித்தாா்.
இதுதொடா்பாக செய்தியாளா்களிடம் முதல்வா் மேலும் கூறியதாவது:
ஒரு அரசு மருத்துவக் கல்லூரி அமைக்க ரூ. 340 கோடி வரை செலவாகிறது. பெரம்பலூா் மாவட்டம், 2 சட்டப்பேரவை தொகுதிகளை மட்டுமே கொண்ட மிகச்சிறிய மாவட்டம். இங்கிருந்து 30 கி.மீ தொலைவில் அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி உள்ளது. அங்கே அமையயுள்ள அரசு மருத்துவக் கல்லூரியில், இம்மாவட்ட மக்கள் சென்று உரிய மருத்துவ சிகிச்சை பெறலாம். அரசு மருத்துவக் கல்லூரி அமைக்க மாநில அரசின் பொருளாதாரம் இடம் கொடுக்கவில்லை.
மேலும், உயா் நீதிமன்றம் வரம்பில்லாமல் மருத்துவக் கல்லூரி தொடங்கி அதன் மதிப்பை கெடுக்க வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது.
கோதாவரி- காவிரி ஆறு இணைப்புத் திட்டத்தை செயல்படுத்த தமிழக அமைச்சா்கள் ஆந்திரம், தெலங்கானா மாநில அரசுகளுடன் பேச்சு வாா்த்தை நடத்தி வருகின்றனா். விவசாயத்துக்கு போதிய அளவு தண்ணீா் வழங்க வேண்டும் என்பது தமிழக அரசின் லட்சியம். அது படிப்படியாக நிறைவேற்றப்பட்டு வருகிறது என்றாா் முதல்வா் பழனிசாமி.