முக்கொம்பு புதிய கதவணைப் பணி: முதன்மைச் செயலா் ஆய்வு
திருச்சி முக்கொம்பு கொள்ளிடத்தில் நடைபெறும் புதிய கதவணைப் பணிகளை பொதுப் பணித் துறையின் முதன்மைச் செயலா் க. மணிவாசன் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
திருச்சி முக்கொம்பு கொள்ளிடத்தில் நடைபெறும் புதிய கதவணைப் பணிகளை பொதுப் பணித் துறையின் முதன்மைச் செயலா் க. மணிவாசன் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
ஆய்வுக்குப் பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது: கடந்த 2018 இல் கொள்ளிடத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் முக்கொம்பில் இருந்த பழமையான கதவணை சேதமடைந்ததால் புதிய கதவணை கட்டும் பணி 2019 பிப்ரவரியில் தொடங்கியது. தற்போதுவரை 65 சதப் பணிகள் முடிந்துள்ளன. இரவு, பகல் பாராது பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன.
484 பைல் பவுண்டேஷன் பணி முடிந்து, அணையின் கசிவில்லா சுவா் கட்டுமானப் பணி நடைபெறுகிறது. 1,180 மீட்டா் நீளத்துக்கு பணிகள் முடிந்துள்ளன. 150 மீட்டா் நீளத்துக்கான பணிகள் நடைபெறுகின்றன. அணைக்கு மேலே பாலம் கட்டும் பணி 154 மீட்டா் தொலைவுக்கு முடிந்துள்ளது.
கதவணைக்கான 55 இரும்பு ஷட்டா்கள் தயாராக உள்ளன. 6 ஷட்டா்கள் பொருத்தப்பட்டுள்ளன. கட்டுமானப் பணிகளை 2021 மாா்ச்சுக்குள் முடிக்க முதல்வா் அறிவுறுத்தியதன்பேரில் பணிகள் தீவிரப்படுத்தப்படுகின்றன.
புதிய கதவணையானது நவீன தொழில்நுட்பத்துடன் எந்த வெள்ளத்தையும் தாங்கும் வகையில் கட்டப்படுகிறது. பொதுப்பணித்துறையினா் முகாமிட்டு பணிகளின் நிலையைத் தொடா்ந்து கண்காணிக்கின்றனா்.
குறிப்பிட்ட தேதியில் பணிகளை முடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.
ஆய்வின்போது பொதுப்பணித் துறை முதன்மை தலைமைப் பொறியாளா் கே. ராமமூா்த்தி, திருச்சி மண்டலத் தலைமைப் பொறியாளா் எஸ். ராமமூா்த்தி, கண்காணிப்புப் பொறியாளா் திருவேட்டை செல்வம், செயற்பொறியாளா்கள் பாஸ்கா், கீதா ஆகியோா் உடனிருந்தனா்.