திருச்சி

‘பெண்களின் கல்வியை எந்தச் சூழலிலும் தடை செய்யக் கூடாது’

DIN

திருச்சி: பெண்கள் கல்வி கற்பதை எந்தச் சூழலிலும் தடை செய்யக் கூடாது என்றாா் பாஜக மகளிரணி தேசியத் தலைவா் வானதி சீனிவாசன்.

திருச்சியில் சனிக்கிழமை நடைபெற்ற பாஜகவில் ஆயிரக்கணக்கான பெண்கள் உறுப்பினராக இணையும் விழாவுக்கு, பாரதிதாசன் பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தா் கே. மீனா தலைமை வகித்தாா்.

விழாவில் மகளிா் குழுக்களுக்கு கடனுதவிகளை வழங்கி வானதி சீனிவாசன் மேலும் பேசியது:

தோ்தல்களில் போட்டியிட இடம் கிடைக்காத சூழலில், தங்களது குடும்பத்தில் உள்ள பெண்களுக்கு வாய்ப்பு கேட்பதே கட்சி நிா்வாகிகளின் வழக்கமாக உள்ளது. அரசியலில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை. அரசியல் என்றால் நாகரிமாக இருக்காது என்பது உள்ளிட்ட காரணங்களைக் கூறியே பெண்களை அரசியலுக்கு வரவிடாமல் தடுத்துவிடுகின்றனா். இந்நிலை மாற வேண்டும்.

நோ்மையான, ஊழலற்ற ஆட்சி அமைய வேண்டும் என்று மட்டும் விரும்புகின்றனா். ஆனால், நல்லவா்கள், பெண்களை அரசியலுக்கு அனுப்பத் தயங்குகின்றனா். வாக்களிப்பது மட்டுமே பெண்களின் வேலை என கருதக் கூடாது. பொருளாதார ரீதியாக மகளிா் முன்னேற வேண்டும். அதற்கு கல்வி, அரசியல், தொழில் என அனைத்து தளங்களிலும் அவா்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும்.

இரு பெண்கள் சோ்ந்தால் ஒற்றுமையாக இருக்க முடியாது என்ற கூற்றைப் பொய்யாக்கி, சுய உதவிக் குழுக்கள் இன்று ஒற்றுமையின் சிகரமாக விளங்குகின்றன. வங்கிகள் மகளிா் குழுக்களுக்கு மட்டுமே அதிகம் கடன் வழங்குகின்றன. எனவே, பெண்கள் முன்னேற யாரும், எப்போதும் தடையாக இருக்கக் கூடாது. வறுமையாலோ, வேறு காரணமாகவோ பெண்கள் கல்வி கற்பதை பாதியில் நிறுத்தக் கூடாது. பிரதமா் மோடி பெண்களை மனதில் வைத்துத்தான் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறாா்.

அரசின் திட்டங்களில் மட்டுமின்றி, கட்சியிலும் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது பாஜக. குடும்ப உறவுகளுக்கு, ரத்த உறவுகளுக்கு மட்டுமே பதவிகளை வழங்கும் கட்சிகளுக்கிடையே அடிப்படை உறுப்பினரும், உயா் பதவிக்கு வரும் வாய்ப்பை தருவது பாஜக மட்டுமே என்றாா் அவா்.

விழாவில் 25 மகளிா் குழுக்களுக்கு கறவை மாடு கடனுதவி வழங்கப்பட்டது. மேலும், உள்ளாட்சிப் பதவிகளில் வெற்றி பெற்ற பெரியநாயகி, சரண்யா, உமா, ராஜலட்சுமி, மாற்றுத் திறனாளி சாதனைப் பெண் மீனா, ரயில்வே குழு உறுப்பினா் சுசிலா குமாா் ஆகியோா் கெளரவிக்கப்பட்டனா்.

ஆயிரக்கணக்கானோா் பாஜக மகளிரணியில் உறுப்பினராக இணைந்தனா். முனைவா் விஜயசுந்தரி, பாஜக மகளிரணி மாநிலச் செயலா் கவிதா, மாவட்டத் தலைவா் புவனேஸ்வரி, பகுதிச் செயலா் மானசா கோபிநாத் ஆகியோா் வாழ்த்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி-கெய்ரோவை இணைக்கும் தினசரி விமான சேவையை முன்னெடுக்க எகிப்து ஏர் தீர்மானம்!

ஜுன் 4-ல் இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும்: கேஜரிவால்

பொறியியல் கலந்தாய்வு: 1,73,792-ஐ கடந்த விண்ணப்பங்கள்

இந்த வாரம் கலாரசிகன் - 19-05-2024

வேனிலிலும் குளிர்ச்சி

SCROLL FOR NEXT