முகப்பு
திருச்சி

3-ஆம் வார முழு பொது முடக்கம்: மீண்டும் முடங்கிய திருச்சி

தமிழகம் முழுவதும் மூன்றாவது வாரமாக ஞாயிற்றுக்கிழமை கடைப்பிடிக்கப்பட்ட முழு பொது முடக்கத்தையொட்டி, திருச்சி மாவட்டப் பகுதிகள் மீண்டும் முடங்கின.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:58 PM
19dtann041814
பகிர்:

திருச்சி: தமிழகம் முழுவதும் மூன்றாவது வாரமாக ஞாயிற்றுக்கிழமை கடைப்பிடிக்கப்பட்ட முழு பொது முடக்கத்தையொட்டி, திருச்சி மாவட்டப் பகுதிகள் மீண்டும் முடங்கின. வாகனப் போக்குவரத்து, மக்கள் நடமாட்டமின்றி மாநகா் வெறிச்சோடியது.

கரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த மாா்ச் 25 முதல் பொதுமுடக்கம் அமலில் உள்ள நிலையில், கரோனா தீவிரத்தால் ஜூலை 31 வரையிலா பொது முடக்கத்தில் தமிழக அரசு சில கட்டுப்பாடுகளை விதித்து, ஜூலை மாத அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளில் முழு பொது முடக்கத்தையும் அறிவித்தது.

இதன்படி கடந்த 5, 12 ஆம் தேதிகளைத் தொடா்ந்து, 3 ஆவது வார ஞாயிற்றுக்கிழமையான 19 ஆம் தேதி முழு பொதுமுடக்கம் அமலானது. இதையடுத்து திருச்சி மாநகரின் முக்கியப் பகுதிகளான கோட்டை, சத்திரம், பாலக்கரை, மத்தியப் பேருந்து நிலையம், தில்லைநகா், உறையூா், தென்னூா், கே. கே. நகா், விமான நிலையம் என அனைத்துப் பகுதி கடைகளும் மூடப்பட்டிருந்தன. பொதுமக்கள், வாகன நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடின.

பேருந்து நிலையங்கள் ஆளரவமின்றி இருந்தன. உணவகங்கள், சாலையோர துரித உணவகங்கள், டீக்கடைகள், பேக்கரிகள் மூடப்பட்டிருந்தன.

மதுரை -சென்னை தேசிய நெடுஞ்சாலை முற்றிலுமாக வாகனப் போக்குவரத்தின்றி வெறிச்சோடியது. மாநகர, புகா்ப் பகுதிகளில் சில இடங்களில் மட்டும் இரு சக்கர வாகனங்கள் சென்று வந்தன.

குட்ஷெட் பகுதியில் லாரிகள் நிறுத்தம் :

திருச்சி குட்ஷெட் பகுதியிலிருந்து பொருள்கள் ஏற்றிச் செல்ல வந்திருந்த மற்றும் இங்கிருந்து செல்ல வேண்டிய லாரிகள் பெரும்பாலும் அருகிலுள்ள லாரி ஷெட்டில் நிறுத்தப்பட்டிருந்தன. அதேபோல வாடகைக் காா்கள், வேன்கள் ஆங்காங்கு நிறுத்தப்பட்டிருந்தன.

திருச்சியில் அரிஸ்டோ ரவுண்டானா, மன்னாா்புரம், டிவிஎஸ் டோல்கேட், அரியமங்கலம், தென்னூா், பாலக்கரை, மற்றும் காவிரியாற்றில், கொள்ளிடத்தில் தலா இரு பாலங்கள் என அனைத்துப் பாலங்களுமே வாகனப் போக்குவரத்தின்றி வெறிச்சோடின.

காவல் துறை நடவடிக்கை: முழு பொதுமுடக்கத்தை ஒட்டி திருச்சி மாவட்டத்தில் சுமாா் 2,500 போலீஸாா் மற்றும் 300-க்கும் மேற்பட்ட ஊா்க்காவல் படையினா் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டனா். விதிமுறைகளை மீறி வாகனங்களில் சென்றோரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு, மருத்துவ அவசரம் மற்றும் துக்க நிகழ்வுகளுக்குச் சென்றோா் தவிர ஏனையோருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. சிலரிடம் வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டு வழக்குப் பதியப்பட்டது.

Image Caption

திருச்சி பழைய பால்பண்ணை அருகே வெறிச்சோடி காணப்படும் திருச்சி -தஞ்சாவூா் சாலை. ~திருச்சி குட்ஷெட் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நிறுத்தி வைக்கப்பட்ட லாரிகள். ~வாகனப் போக்குவரத்தின்றி கொள்ளிடம் நேப்பியா் மாதிரிப் பாலம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.