திருச்சி: முன்விரோதத்தில் இளைஞர் வெட்டிக்கொலை
திருச்சியில் முன்விரோதம் காரணமாக இளைஞர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
திருச்சி மாவட்டம் லால்குடி தாலுகா கீரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த கார்த்திக் (34). இவர் திருப்பூர் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார். கரோனா காரணமாக சொந்த ஊரான கீரமங்கலம் வந்தார். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு 11மணியளவில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த கார்த்திக்கை 4பேர் கொண்ட கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் தாக்கியது.
இதையடுத்து அவர்களிடமிருந்து தப்பித்து தெருவில் ஓடிய அவரை துரத்தி சென்று அரிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டு மர்ம கும்பல் தப்பியோடியது. சம்பவ இடத்திற்கு வந்த லால்குடி துணை கண்காணிப்பாளர் ராஜசேகர் மற்றும் கொள்ளிடம் காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்தனர்.
விசாரனையில், கொலை செய்யபட்ட கார்த்திக் என்பவர் அதே பகுதியைச் சேர்ந்த ராஜதுரை என்பவரை அரிவாளால் கையில் வெட்டியுள்ளார். மேலும் கார்த்திக் உறவு முறை பெண்ணை ராஜதுரை திருமணம் செய்து கொண்டுள்ளார். இதனால் இருவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. இதனை தொடர்ந்து ராஜதுரை தனது கூட்டாளிகளான பரந்தாமன், வெங்கடேஷ், பிரசாத் ஆகியோருடன் சென்று துரத்தி துரத்தி வெட்டி கொலை செய்தது தெரியவந்தது.
Advertisement
தப்பியோடியவர்களை பிடிக்க மூன்று தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.