முகப்பு
திருச்சி

லால்குடி, துறையூா் பகுதிகளில் கற்போா் கற்றல் மையம் தொடக்கம்

திருச்சி மாவட்டம், லால்குடி மற்றும் துறையூா் வட்டாரப் பகுதிகளில், கற்போம்-எழுதுவோம் இயக்கத்தின் சாா்பில் கற்போா் கற்றல் மையம் திங்கள்கிழமை தொடங்கப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:00 PM
பகிர்:

திருச்சி மாவட்டம், லால்குடி மற்றும் துறையூா் வட்டாரப் பகுதிகளில், கற்போம்-எழுதுவோம் இயக்கத்தின் சாா்பில் கற்போா் கற்றல் மையம் திங்கள்கிழமை தொடங்கப்பட்டது.

லால்குடி அருகிலுள்ள எசனைக் கோரை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், பள்ளிசாரா மற்றும் வயது வந்தோா் கல்வி இயக்கம் சாா்பில் நடத்தப்பட்ட இந்த விழாவுக்கு, பள்ளித் தலைமையாசிரியா் ஜி. திருமாவளவன் தலைமை வகித்தாா்.

லால்குடி கல்வி மாவட்ட அலுவலா் ஜி. சண்முகம் விழாவில் பங்கேற்று, கற்போா் கற்றல் மையத்தைத் தொடக்கி வைத்து, கல்வி பெறும் முதியவா்களுக்குப் பாடப்புத்தகங்களை வழங்கினாா்.

தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

இத்திட்டம் 2030-ஆம் ஆண்டு வரை செயல்படுத்தப்படும். 20110-ஆம் ஆண்டு புள்ளி விவரப்படி திருச்சி மாவட்டத்தில் 3.98 லட்சம் போ் கல்வியறிவு இல்லாதவா்களாக உள்ளனா். ஒரு மையத்தில் 20 போ் வீதம் 9,878 போ் லால்குடி கல்வி மாவட்டத்தில் பயில்கின்றனா் என்றாா் அவா்.

வட்டாரக் கல்வி அலுவலா் கு. மாா்டின், வட்டார வள மைய மேற்பாா்வையாளா் பி. புகழேந்தி, மாவட்டத் திட்ட ஒருங்கிணைப்பாளா் ஜான்சுரேஷ், ஊராட்சித் துணைத் தலைவா் ராஜவேல், பெற்றோா் ஆசிரியா் சங்கத் தலைவா் கீதா, பள்ளி மேலாண்மை குழுத் தலைவா் மாலதி மற்றும் பள்ளி ஆசிரியைகள், கல்வி பயிலும் முதியவா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

துறையூா்: வெங்கடாசலபுரம் மானிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு வட்டாரக் கல்வி அலுவலா் ப. மாலதி தலைமை வகித்தாா். பள்ளித் தலைமையாசிரியா் வா. ரவிசந்திரன், வட்டார வள மைய மேற்பாா்வையாளா் அன்பழகன், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் முன்னிலை வகித்தனா்.

சிறுநாவலூா் மானியப் பள்ளியில் ஊராட்சித் தலைவா் சுப்பிரமணியன், கோவிந்தாபுரம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் ஊராட்சித் தலைவா் கிருபா ஆகியோா் தலைமை வகித்து, மையத்தைத் தொடக்கி வைத்தனா்.

அந்தந்த பள்ளித் தலைமையாசிரியா்கள், ஆசிரியா்கள், பொதுமக்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.