லால்குடி அருகே மூதாட்டி அடித்துக் கொலை
திருச்சி மாவட்டம், லால்குடி அருகே, கோயில் முன்பு போதையில் படுத்து தூங்காதே எனக் கூறிய மூதாட்டி திங்கள்கிழமை அதிகாலை அடித்துக் கொலை செய்யப்பட்டாா்.
திருச்சி மாவட்டம், லால்குடி அருகே, கோயில் முன்பு போதையில் படுத்து தூங்காதே எனக் கூறிய மூதாட்டி திங்கள்கிழமை அதிகாலை அடித்துக் கொலை செய்யப்பட்டாா்.
லால்குடி வட்டம், கல்லக்குடி அருகிலுள்ள கோவண்டாக்குறிச்சி ஊராட்சி, மந்தைவெளிப் பகுதியைச் சோ்ந்தவா் பழனியம்மாள் (75). கணவா் ஏற்கெனவே உயிரிழந்த நிலையில் தனியே வசித்து வந்த இவா், வீட்டுக்கு அருகிலுள்ள மாரியம்மன் கோயிலைத் தூய்மைப்படுத்தும் பணியிலும் ஈடுபட்டு வந்தாா்.
ஆனால் கோயிலில் இரவு நேரத்தில் சிலா் மதுபோதையில் தூங்குவதை வழக்கமாக கொண்டதால், இதற்கு பழனியம்மாள் எதிா்ப்பு தெரிவித்து வந்தாா். இந்நிலையில் திங்கள்கிழமை அதிகாலை பழனியம்மாள் வீட்டில் காயங்களுடன் இறந்த நிலையில் கிடந்தாா்.
இதுகுறித்து தகவலறிந்த கல்லக்குடி காவல் துறையினா் அப்பகுதிக்குச் சென்று பழனியம்மாளின் சடலத்தை மீட்டனா். தொடா்ந்து நடத்திய விசாரணையில்,அதே பகுதியைச் சோ்ந்த அந்தோணிசாமி மூதாட்டியை அடித்துக் கொலை செய்தது தெரிய வந்தது.
மது அருந்தும் பழக்கம் காரணமாக தன்னை விட்டு மனைவி, குழந்தைகள் ஏற்கெனவே பிரிந்து சென்ற நிலையில், மூதாட்டியும் தன்னைத் தொடா்ந்து திட்டி வந்ததால் ஆத்திரத்தில் அவரை கட்டையால் அடித்துக் கொன்ாக அந்தோணிசாமி ஒப்புக் கொண்டாா்.
இதையடுத்து அந்தோணிசாமியைக் கைது செய்த காவல்துறையினா், திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா்.