திருவெறும்பூர் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா: ரூ. 18 ஆயிரம் பறிமுதல்
திருவெறும்பூர் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகித்த அதிமுகவைச் சேர்ந்த இருவரிடமிருந்து ரூ.18, 500 பறிமுதல் செய்துள்ளனர்.
திருவெறும்பூர் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகித்த அதிமுகவைச் சேர்ந்த இருவரிடமிருந்து ரூ.18, 500 பறிமுதல் செய்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் சட்டப்பேரவைத் தேர்தல் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. இதனை தொடர்ந்து அரசியல் கட்சியினர் வாக்காளர்களை கவரும் விதத்தில் பரிசுப் பொருள்கள், மற்றும் ரொக்கம் உள்ளிட்டவைகளை விநியோகித்து வருகின்றனர்.
அதனை தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் போலீசார் இரவு பகலாக பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ரொக்கம் மற்றும் பரிசுப்பொருட்களை வழங்குபவர்கள் பிடிக்கப்பட்டு பறிமுதல் செய்வதுடன் அவர்கள் மீது வழக்குகளும் பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில், திருவெறும்பூர் தொகுதியிலும் பல்வேறு அரசியல் கட்சியினர் ரொக்கம் பட்டுவாடா செய்வதாக தேர்தல் பறக்கும் படையினருக்கு தகவல் கிடைத்தது.
இதையும் படிக்கலாமே.. கரோனா நோயாளிகள் இந்தத் தவறை செய்ய வேண்டாம்: மும்பை மாநகராட்சி
இந்த நிலையில், திங்கள்கிழமை அதிகாலை திருவெறும்பூர் பர்மா காலனி பகுதியில், தேர்தல் பறக்கும் படை அதிகாரி மலர்கொடி தலைமையிலான குழுவினர் தகவலின் பேரில் மேற்கொண்ட சோதனையில், அங்கு அதிமுகவினர் பணம் பட்டுவாடா செய்தது தெரியவந்தது.
இதனையடுத்து, திருவெறும்பூர் பர்மா காலனியை சேர்ந்த சுவாமிநாதன் (60) பாஸ்கர் (42) ஆகியோரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில், அவர்கள் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ததும், அவர்களிடம் ரூ. 18,500 ரொக்கம் இருந்ததும் தெரியவந்தது.
இதனையடுத்து அவற்றை பறிமுதல் செய்த பறக்கும் படையினர், இச்சம்பவம் குறித்து திருவெறும்பூர் போலீசாரிடம் புகார் செய்தனர். அதன் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.