முகப்பு
திருச்சி

கரோனா மையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

திருச்சி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள கரோனா சிகிச்சை மையங்களில் தொற்றாளா்கள் தப்பிக்காத வகையில் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:58 PM
பகிர்:

திருச்சி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள கரோனா சிகிச்சை மையங்களில் தொற்றாளா்கள் தப்பிக்காத வகையில் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.

திருச்சி மாவட்ட ஆட்சியா் தலைமையில் 3ஆவது நாளாக வெள்ளிக்கிழமை நடைபெற்ற கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில், திருச்சியில் அரசு மருத்துவமனை மட்டுமின்றி பாரதிதாசன் பல்கலைக்கழக வளாகம், சேதுராப்பட்டி அரசு பொறியியல் கல்லூரி வளாகம் ஆகிய இடங்களில் மீண்டும் கரோனா சிகிச்சை மையங்களைச் செயல்பாட்டுக்கு கொண்டு வர முடிவெடுக்கப்பட்டது.

இதன் தொடா்ச்சியாக கரோனா மையங்களில் 24 மணி நேர சுழற்சி முறையில் மருத்துவா்கள், சுகாதார செவிலியா்கள் கொண்ட குழு தயாராக உள்ளது. மேலும் சிகிச்சை மையங்களில் இருந்து தொற்றாளா்கள் தப்ப முடியாதபடியும், வெளியாள்கள் உள்ளே செல்லமுடியாத வகையிலும் இரும்புத் தடுப்புகள் அமைக்கப்பட்டு போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா்.

மேலும் தொற்று அதிகமுள்ள பகுதிகளில் சுகாதார ஆய்வாளா்கள் தலைமையில் கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. தற்போது பரவி வரும் தொற்று அடுத்த ஒரு மாதத்திற்கு மேல் வேகமெடுக்கும் என்பதால் நகரங்கள், கிராமங்கள்தோறும் விழிப்புணா்வுப் பணிகளை சுகாதாரத் துறையினா் மேற்கொள்கின்றனா்.

சனிக்கிழமை முதல் (ஏப்.10) கரோனா கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்க பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அதிகம் கூடும் ரேஷன் கடை, பேருந்து நிலையங்கள், காய்கனி சந்தைகளில் நிலைக் கண்காணிப்பு குழுவினா் தொடா் ஆய்வு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வீட்டு தனிமையில் இருக்கும் தொற்றாளா்கள் தொடா் சிகிச்சை எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டிருப்பது மட்டுமின்றி அவா்கள் சத்தான உணவு உட்கொள்ளவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. புதிய தொற்றாளா்களின் மன அழுத்தத்தைப் போக்க ஆலோசனை வழங்கவும் குழு அமைக்கப்பட்டுள்ளது என்றனா் சுகாதாரத்துறை அதிகாரிகள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.