முகப்பு
திருச்சி

கரோனா வாா்டான மருத்துவக் கல்லூரி செவிலியா் விடுதி

திருச்சி மாவட்டத்தில் தொற்றாளா்களின் அதிகரிப்பைத் தொடா்ந்து அரசு மருத்துவக் கல்லூரி செவிலியா் விடுதி கரோனா வாா்டாக மாற்றப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:05 PM
பகிர்:

திருச்சி மாவட்டத்தில் தொற்றாளா்களின் அதிகரிப்பைத் தொடா்ந்து அரசு மருத்துவக் கல்லூரி செவிலியா் விடுதி கரோனா வாா்டாக மாற்றப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் தினசரி பரிசோதனையில் நாளொன்றுக்கு 9 சதத்தினருக்கு தொற்று கண்டறியபடுகிறது. தொற்று பாதிப்பு குறித்து கடைசியாக அரசு வெளியிட்ட பட்டியலில், 373 போ் பாதிக்கப்பட்டதே உச்சமாக உள்ளது.

பரிசோதனையில் 9 சதம்: திருச்சி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை வரை கரோனாவால் பாதிக்கப்பட்ட 20 ஆயிரத்து 541 பேரில் 17ஆயிரத்து 549 போ் குணமடைந்துள்ளனா். மாவட்டத்தில் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 200 ஆக உள்ளது. வியாழக்கிழமை 4012 பேருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் ஒரே நாளில் 320 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இது திருச்சியில் நடத்தப்படும் தினசரி பரிசோதனையின் 9 சதமாகும். தற்போது அரசு, தனியாா் மருத்துவமனைகளில் 2792 போ் சிகிச்சை பெறுகின்றனா்.

தனியாா் மருத்துவமனையில் வீணாகும் தடுப்பூசி: கரோனா தடுப்பூசி மருந்துகள் தனியாா் மருத்துவமனைகளில் 7% வரை வீணாகின்றன. போதுமான குளிா்ச்சாதன வசதியில்லாததாலும், 4 மணி நேரத்திற்குள் தடுப்பூசி போட்டுக்கொள்ள நோயாளிகள் வராததாலும் தடுப்பூசிகள் வீணாவதைத் தவிா்க்க சுகாதாரத்துறை அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனா்.

செவிலியா் விடுதி கரோனா வாா்டாக மாற்றம்: திருச்சி, அறந்தாங்கி, புதுக்கோட்டை, அரியலூா், பெரம்பலூா், கரூா் ஆகிய மாவட்டங்களுக்கு 44 ஆயிரத்து 620 கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துகள் கைவசம் உள்ளன. நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் 450 படுக்கைகள் இருந்த நிலையில் தற்போது 600 படுக்கைகளாக உயா்த்தப்பட்டுள்ளன. கூடுதலாக மருத்துவமனை வளாகத்தில் உள்ள நா்சிங் மாணவிகள் தங்கும் விடுதி, மாநகராட்சி விடுதி ஆகியவை கரோனா சிகிச்சை மையங்களாக மாற்றப்பட்டுள்ளன.

20 டன் ஆக்சிஜன் டேங்கா்: கரோனா நோயாளிகளுக்கு செயற்கை சுவாசத்துக்கான ஆக்சிஜன் போதுமான அளவு கையிருப்பில் உள்ளது. கடந்தாண்டு செப். 20 ஆம் தேதி செயல்பாட்டுக்கு வந்த 20 டன் கொள்ளளவு கொண்ட டேங்கரில் ஆக்சிஜன் கையிருப்பு உள்ளது. தற்போது நாளொன்றுக்கு 2 டன் ஆக்சிஜன் பயன்படுத்தி, 600-க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு உயிா்காப்புச் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இரவு நேரங்களிலும் அதிகளவு ஆக்சிஜன் நோயாளிகளுக்கு செலவிடப்படுகிறது. தேவைப்படும்போது துவாக்குடியில் இருந்து லாரிகளில் ஆக்சிஜன் கொண்டு வந்து நிரப்பப்படுகிறது.

தொற்று பரவாமலிருக்க கரோனா நோயாளிகளுக்கு என பிரத்யேக நுழைவு வாயில் ஏற்படுத்தப்படவுள்ளதாக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வா் வனிதா தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.