வாழ வைக்கும் வனங்கள்!
ஒரே ஒரு யானை ஊருக்குள் வந்துவிட்டால் மக்கள் போராட்டம் நடத்துகிறார்கள்; கூட்டம் கூட்டமாக மக்கள் வனங்களுக்குள் போகிறார்களே, வனவிலங்குகள் போராட்டமா நடத்த முடியும்?
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில், கெஜலட்டி என்ற ஒரு சிறுவனப் பகுதி. இங்கு ஆதி கருவண்ணராயர் கோயில் அமைந்துள்ளது. காராச்சிக்கொரை வன சோதனைச் சாவடியைக் கடந்து 15 கி.மீ. வனத்துக்குள் சென்று இந்தக் கோயிலை அடைய வேண்டும். இந்த இடம் புலி, சிறுத்தை, யானை, காட்டெருமை, காட்டுப் பன்றி, அழிவின் விளிம்பில் இருக்கும் செந்நாய் போன்ற விலங்கினங்களின் உறைவிடம். புலிகள் இனப்பெருக்கம் செய்யும் இடமாகவும், செந்நாய்கள் வேட்டையாடும் இடமாகவும் உள்ளது. இந்த இடத்தைச் சுற்றி மாயாற்றின் கிளை நதி ஒன்று ஓடுகிறது. அங்குள்ள வனவிலங்குகள் எல்லாம் அங்குதான் தண்ணீர் குடிக்க வந்துசேரும்.
ஆண்டுதோறும் மாசிமகத் திருவிழாவைக் கொண்டாடும் வகையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் இங்கு வந்து கூடுவார்கள். வாகனங்களில் ஒலிபெருக்கிகளைக் கட்டிக்கொண்டு, பாடல்களை அலறவிட்டுக்கொண்டு, பாத்திர பண்டங்கள், மளிகைப் பொருள்கள், பலியிடுவதற்கு ஆடுகள், கோழிகள், அடுப்புகள், எரிவாயு உருளைகள் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு ஆர்ப்பாட்டமாக வந்து அங்கேயே தங்கி விடுவார்கள். ஆடுகளையும் கோழிகளையும் பலியிட்டு, அந்தக் கறியைச் சமைத்துச் சாப்பிட்டு, மாயாற்றில் குளித்து, மூன்று நாள்கள் உற்சாகமாக இருந்துவிட்டு, அதே ஆர்ப்பாட்டத்துடன் வெளியேறுவார்கள்.
ஒருமுறை வனம்சார்ந்த பணி நிமித்தம் நான் என் குழுவினருடன் அங்கு சென்ற போது, தற்செயலாக இது குறித்து அறிய நேர்ந்தது. 2017-இல் புலிகள் காப்பகத்தின் கள இயக்குநருக்கு இதுகுறித்துப் புகார் கடிதம் அனுப்பினேன். பெரிதாகப் பலனில்லை. தகவல் அறியும் சட்டத்தின்கீழ் மனு செய்து பல கேள்விகளை எழுப்பினேன். வனத்துறை விழித்துக்கொண்டு 2022-இல் மக்களுக்குச் சில கட்டுப்பாடுகளை விதித்து, அவர்கள் வந்த வாகனங்களை சோதனைச் சாவடியில் நிறுத்தியது. மக்கள் எதிர்த்தார்கள்.
அவர்களுக்கு ஆதரவாக உள்ளூர் அரசியல்வாதிகளும், மத அமைப்புகளும் வந்துசேர மக்கள் தடுப்புகளை உடைத்து வனத்துக்குள் சென்றார்கள். இது பெரும் களேபரமாகி ஊடகங்களால் வெளியுலகுக்குத் தெரிய வந்தது. இதுதான் தகுந்த நேரம் என்று நான் சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த வனப் பகுதியின் தாங்கும் சக்தியை நிர்ணயிக்க வேண்டும்: அதற்குக் குறைவான எண்ணிக்கையில் கடும் கட்டுப்பாடுகளுடன் மக்களை அனுமதிக்க வேண்டும்' என்று கோரி, பொதுநல வழக்கு தொடர்ந்தேன். அதற்குத் தேவையான ஆதாரங்களைத் திரட்டுவது அவ்வளவு எளிதாக இல்லை. வனத்துறை என்னைச் சந்தேகக் கண்ணோடு பார்த்தது; அதிகாரிகள் மிக ஜாக்கிரதையாகப் பட்டும் படாமலும் நடந்து கொண்டனர். பெயர்பெற்ற சுற்றுச்சூழல் அமைப்புகள் உதவி செய்யவில்லை. அலைந்து திரிந்து கடைசியில் 10 ஆண்டுகளுக்கு முன்பு சில களங்களில் ஒன்றாகப் பணி செய்து, பின்னர் தொடர்புவிட்டுப் போயிருந்த ஒரு சுற்றுச்சூழல் ஆர்வலரைக் கண்டறிந்தேன். அவர் மாசிமகக் கொண்டாட்டங்களின் புகைப்படங்கள், காணொலிப் படங்களைத் தந்து உதவினார்.
வழக்கு நடைபெற்றது. அந்த வனப் பகுதியின் தாங்கும் சக்தியை அளந்து நிர்ணயிக்கும்படி நீதிமன்றம் என்னைப் பணித்தது. தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் குறிப்பிட்டுள்ள வழிகாட்டு நெறிகளின்படி, கன்ஹா தேசியப் பூங்கா மற்றும் சதுரகிரி ஆகியவற்றை முன்மாதிரியாகக் கொண்டு, எங்கள் குழுவினரோடு சென்று இந்தக் குறிப்பிட்ட வனப்பகுதியை அளந்து கணக்கிட்டு, அதன் தாங்கும் சக்தி நாளொன்றுக்கு 29 வாகனங்கள் அல்லது 174 நபர்கள் என்று நிர்ணயித்து நீதிமன்றத்தில் சமர்ப்பித்தேன்.
அதுவரை நாளொன்றுக்கு 500-க்கும் மேற்பட்ட வாகனங்களும், சுமார் 10,000 நபர்களும் வந்து கொண்டிருந்தார்கள். 2023-இல் நீதிமன்றம் நாளொன்றுக்கு 100 வாகனங்களை மட்டும் சில நிபந்தனைகளோடு அனுமதிக்கலாம் என்று இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. 2024 மாசிமகம் நெருங்கியதும் மக்கள் உச்சநீதிமன்றம் சென்றார்கள். உச்சநீதிமன்றம் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பில் தலையிட மறுத்து வழக்கைத் தள்ளுபடி செய்தது.
2024 மாசிமகமும் வந்தது. வனத் துறை, சோதனைச் சாவடியிலேயே வாகனங்களை நிறுத்தி கடும் கட்டுப்பாடுகளுடன் நூறு வாகனகங்ளை மட்டுமே அனுமதித்தது. நீதிமன்ற உத்தரவை பொருட்படுத்தாத மக்கள் முந்தைய ஆண்டுகளில் வந்ததைப் போலவே வந்து குவிந்தனர். மதவாத அமைப்புகளும் உள்ளூர் அரசியல்வாதிகளும் நெருங்க முடியாத வகையில் காவல் துறையினரும் வனத் துறையினரும் அதிக எண்ணிக்கையில் குவிக்கப்பட்டனர். அனுமதி கிடைக்காத காரணத்தால் பல வாகனங்கள் நெடுந்தொலைவுக்கு நிறுத்தப்பட்டிருந்தன. ஊடகங்கள் வந்து சேர்ந்தன. 'ஐயோ பாவம்! மக்கள் குழந்தைகளுடன் பரிதவிப்பு' வனத் துறைக் கெடுபிடி" என்று மக்களுக்கு ஆதரவாகச் செய்திகள் வெளியிட்டன. அந்த அனுதாப அலையில் வனப் பாதுகாப்பு, தாங்கும் சக்தி எல்லாம் காணாமல்போயின. மனுதாரர் என்ற முறையில் என்னை வனத்துக்குள் அனுமதிக்குமாறு வனத் துறையிடம் அனுமதி கோரியிருந்தேன். எனது பாதுகாப்பு கருதி வனத் துறை மறுத்துவிட்டது.
நீதிமன்றத்தில் அரசுத் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. நீதிமன்றம், அடுத்த ஆண்டும் அதே தீர்ப்பை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும், மேலும் மிகக் கடுமையான சில விதிமுறைகளையும் ஏற்படுத்தியது. திருவிழா நாள்களில் மக்களிடையே பேசி வனம், வனவிலங்குகள் மற்றும் வனப் பாதுகாப்பு குறித்து அமைதியான முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்த எங்கள் குழுவினருக்கு அனுமதியளித்தது.
2025 மாசிமகமும் வந்தது. அதற்கு ஒரு மாதகாலம் முன்னதாகவே வனத் துறை, நீதிமன்ற உத்தரவு, நிபந்தனைகள் ஆகியவற்றை எல்லாப் பத்திரிகைகளிலும் வெளியிட்டது. இந்த முறை வாகனங்கள் அனைத்தும் சோதனைச் சாவடியிலேயே தீவிரமாகச் சோதனை செய்யப்பட்டு மதுபானம், நெகிழிப் பொருள்கள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டன. நான் உண்மையாகவே வனத்தின் பாதுகாப்புக்காகத்தான் போராடுகிறேன் என்பதை வனத் துறை உணர்ந்துகொண்டதால் என்னைக் குறித்த அதன் நிலைப்பாடு மாறியது. இந்த முறை வனம், காவல், போக்குவரத்து, அறநிலையத் துறை ஆகியவற்றின் முழு ஆதரவுடனும் பலத்த பாதுகாப்புடனும் நாங்கள் வனத்துக்குள் சென்றோம்.
வாகனங்களின் எண்ணிக்கையும் மக்களின் எண்ணிக்கையும் வெகுவாகக் குறைந்திருந்தது. ஒலிபெருக்கிகள், அதிக ஒளி தரக்கூடிய விளக்குகள் எரிவாயு அடுப்புகள், உருளைகள், நெகிழி, திறந்தவெளியில் மலம் கழித்தல் போன்றவை குறையவில்லை. மக்களிடம் வனப் பாதுகாப்பு, தூய்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த நாங்கள் முயன்றதில் தோல்வியே கிட்டியது. அவர்கள் நாங்கள் சொன்னதைக் காதில் வாங்கக்கூட இல்லை.
நிகழாண்டு மாசி மகத்துக்கும் அதே உத்தரவை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கூறி நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்தது. மார்ச் 1, 2, 3 ஆகிய தேதிகளில் நடைபெற்ற விழாவில் வனத் துறை எங்களையும் இணைத்துக் கொண்டு மிகச் சிறப்பாகச் செயல்பட்டது. ஆன்லைனில் முன்பதிவு செய்யும் முறை கட்டாயமாக்கப்பட்டது. ஒலிபெருக்கிகள், மதுப் புட்டிகள், நெகிழித் தண்ணீர்ப் புட்டிகள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டன. வனத் துறையினர் பல குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு குழுவும் ஒரு வனச் சரகரின் தலைமையில் ஒரு பணியை எடுத்துக்கொண்டு மிகத் திறமையாகப் பணியாற்றினர். பறக்கும் படை பறந்து கண்காணித்தது. ட்ரோன் மூலமும் கண்காணிப்பு நடைபெற்றது.
நீதிமன்ற உத்தரவு வாகனங்களின் எண்ணிக்கையைத்தான் கட்டுப்படுத்தியதேயன்றி மக்களின் எண்ணிக்கையை அல்ல. அதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட மக்கள் மகிழுந்துகளைத் தவிர்த்து லாரிகளிலும், சிற்றுந்துகளிலும் வந்திருந்தனர்.
ஓர் அறையின் கொள்ளளவு 10 பேர் என்றிருந்தால், அதில் 1000 பேரை அனுமதித்தால் என்னவாகும்? அத்தனைப் பேரும் மூச்சுத் திணறி இறந்து போவார்கள். வனங்களில் நிலை வேறு. 'தாங்கும் சக்திக்கு மீறி மக்கள் அனுமதிக்கப்பட்டால் அவர்களுக்கு ஒன்றும் ஆகாது; வனங்கள் அழிந்து போகும்! வனங்கள் அழிந்தால் மனித குலமும் அழியும்!
அழிந்து போன விலங்கினங்களைப் பிற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்து நம் வனங்களில் பெருகச் செய்வது சாத்தியமாகலாம். வனங்களை இறக்குமதி செய்து இங்கு வளர்ப்பது சாத்தியமில்லை! மிச்சமிருக்கும் வனங்களைப் பாதுகாப்பது ஒன்றே நமக்கிருக்கும் வழி. மக்களை வனங்களுக்குள் அனுமதிக்காமல் இருப்பதே நல்லது. ஒரே ஒரு யானை ஊருக்குள் வந்துவிட்டால் மக்கள் போராட்டம் நடத்துகிறார்கள்; கூட்டம் கூட்டமாக மக்கள் வனங்களுக்குள் போகிறார்களே, வனவிலங்குகள் போராட்டமா நடத்த முடியும்? விலங்குகள் எப்போதாவது உணவும் தண்ணீரும் தேடி ஊருக்குள் வருகின்றன; மக்கள் உல்லாசம் தேடி எல்லா நேரமும் வனங்களுக்குள் போகிறார்கள். இது நியாயம் அன்று.
அண்மையில் உலக வன தினம் கடைப்பிடிக்கப்பட்ட நிலையில், உச்சநீதிமன்றம் தலையிட்டு ஒரே தீர்ப்பில் நாட்டிலுள்ள அனைத்து வனங்களிலுமுள்ள அனைத்து வழிபாட்டுத் தலங்களையும் வனங்களுக்கு வெளியில் கொண்டு வந்து, அங்கு மக்கள் வழிபட வகைசெய்ய வேண்டும் என்பதே என்னைப் போன்ற சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் வேண்டுகோள்.