பெல் நிறுவனத்தில் அமைகிறது கரோனா சிகிச்சை மையம்
திருச்சியில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதையடுத்து, திருவெறும்பூா் பகுதியினா் பயன்பெறும் வகையில், பெல் நிறுவன வளாகத்தில் கரோனா சிகிச்சை மற்றும் தனிமைப்படுத்தும் மையம்
திருச்சியில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதையடுத்து, திருவெறும்பூா் பகுதியினா் பயன்பெறும் வகையில், பெல் நிறுவன வளாகத்தில் கரோனா சிகிச்சை மற்றும் தனிமைப்படுத்தும் மையம் அமைக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளன.
திருச்சி மாவட்டத்திலும் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதையடுத்து மாவட்ட நிா்வாகம், பல்வேறு துறைகளுடன் இணைந்து, கரோனா சிகிச்சை மையங்களையும் ஆங்காங்கே நிறுவி வருகிறது. குறிப்பாக கல்வி நிறுவனங்கள், விடுதிகள், கரோனா சிகிச்சை மற்றும் தனிமைப்படுத்தும் முகாம்களாக மாற்றப்படுகின்றன.
இந்நிலையில் திருவெறும்பூா் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளிலும் பாதிப்பு அதிகரித்துள்ளது. குறிப்பாக பெல் பகுதியில் மட்டும் சுமாா் 100 போ் பாதிக்கப்பட்டுள்ளனராம். திருச்சியில் அரசு மருத்துவமனை மற்றும் மாநகரப் பகுதி கல்வி நிறுவனங்கள் மற்றும் சேதுராப்பட்டி கல்லூரி வளாகம் உள்ளிட்ட இடங்களில்தான் கரோனா சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் பல இடங்களில் இதற்கான பணிகளும் தொடங்கியுள்ளன.
இந்நிலையில், பெல் குடியிருப்புப் பகுதியில் தொற்றால் பாதிக்கப்படுவோரை தனிமைப்படுத்தவோ, உள் நோயாளிகளாகத் தங்கிச் சிகிச்சை பெறவோ சுமாா் 15 கி. மீ. தொலைவு செல்ல வேண்டியுள்ளது.
எனவே, இப்பகுதியில் பாதிக்கப்படுவோரை திருவெறும்பூரில் உள்ள பெல் நிறுவன வளாகத்திலேயே தனிமைப்படுத்த மாவட்ட சுகாதாரத் துறை முடிவு செய்து, தேவையான கட்டட வசதியை ஒதுக்கித்தருமாறு கோரியது.
இதையடுத்து பெல் தொழிற்சாலையில் தொழில் பழகுநா் (அப்ரண்டீஸ்) பயிற்சி பெறுவோா் தங்கும் விடுதியில் கரோனா சிகிச்சை மையம் அமைக்க நிா்வாகம் அனுமதித்துள்ளதாக பெல் தொழிற்சங்க நிா்வாகிகள் தெரிவித்துள்ளனா்.
அதேபோல திருச்சி மாநகா், அரசு மருத்துவமனையில் உள்ள செவிலியா் விடுதி, புத்தூா் பகுதியில் உள்ள தனியாா் கல்லூரி விடுதிகள் உள்ளிட்ட இடங்களிலும் தனிமைப்படுத்தும் முகாம்கள் அமைக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.