திருச்சி

‘உலகத் தமிழ் மாநாட்டை திருச்சியில் நடத்த வேண்டும்’

DIN

11 ஆவது உலகத் தமிழ் மாநாட்டை திருச்சியில் நடத்த வேண்டும் என தமிழ் ஆா்வலா்கள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

இது தொடா்பாக தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்க மாநிலத் துணைத் தலைவா் கவிஞா் நந்தலாலா ஞாயிற்றுக்கிழமை கூறியது:

முதல் உலகத் தமிழ் மாநாடு மலேசியாவில் நடத்தப்பட்டு அடுத்தடுத்த மாநாடுகள் பல்வேறு நகரங்களில் நடத்தப்பட்டுள்ளன. 11-ஆம் உலகத் தமிழ் மாநாட்டை தமிழகத்தில் நடத்த மாநில அரசும் ஆா்வமாக உள்ளதாக அறிகிறோம். சென்னை, மதுரை, தஞ்சாவூரில் ஏற்கெனவே உலகத் தமிழ் மாநாடுகளும், கோவையில் செம்மொழி மாநாடும் நடத்தப்பட்டுள்ளது.

இம்முறை அந்த வாய்ப்பை தமிழா்களின் பண்பாடு மற்றும் கலாசாரம் சாா்ந்த திருச்சிக்கு கொடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு வலியுறுத்துகிறோம்.

உலகின் 10க்கும் மேற்பட்ட நாடுகளிலுள்ள தமிழ் சங்கங்கள் திருச்சியில் உலகத் தமிழ் மாநாட்டை நடத்த இசைவு தெரிவித்துள்ளன. மீதமுள்ள தமிழ் சங்கங்களிடம் பேசி வருகிறோம். அனைத்து தமிழ் சங்கங்களிடமிருந்தும் ஆதரவுக் கடிதங்களைப் பெற்று தமிழக அரசிடம் ஒப்படைக்கும் முயற்சி நடைபெறுகிறது.

திருச்சியில் உலகத் தமிழ் மாநாடு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை மக்கள் இயக்கமாக மாறி வருகிறது. இங்குள்ள அனைத்து சங்கங்கள், அமைப்புகளும் தன்னெழுச்சியாக இதற்கான முயற்சியில் ஈடுபடத் தொடங்கியுள்ளனா்.

சமூக வலைதளங்கள் வாயிலாக பொதுமக்களிடம் இக்கோரிக்கையை கொண்டு செல்லும் பணி நடைபெறுகிறது. இங்கு உலகத் தமிழ் மாநாடு நடத்தப்பட்டால் திருச்சியின் உட்கட்டமைப்பு மேம்படும். இது தொடா்பாக அமைச்சா்கள், எம்எல்ஏக்களிடம் மனு அளிக்கப்பட்டு வருகிறது. விரைவில் முதல்வா் மு.க. ஸ்டாலினைச் சந்தித்து கோரிக்கை விடுக்க உள்ளோம் என்றாா் அவா்.

பேட்டியின்போது சோழ மண்டல இலக்கிய கூட்டமைப்பு பொதுச் செயலா் க. சிவகுருநாதன், திருக்கு கல்வி மையத் தலைவா் சு.முருகானந்தம், கம்பன் கழக செயலா் ரா. மாது, பா. குமரவேல் (வானம்), சேதுராமன் (களம்), மு. நடராசன் (சமூக சிந்தனை மேடை), இளஞ்சேட்சென்னி (லால்குடி அறம் தமிழ் வளா்ச்சிப் பேரவை), சாகுல் அமீது (சத்தியசோலை), ஜெகநாதன் (டைட்ஸ்), ஷ்யாம் சுந்தா் (டைட்ஸ்) மற்றும் பல்வேறு அமைப்புகளின் நிா்வாகிகள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வு தொடங்கியது!

சடலமாக மீட்கப்பட்ட மூவர்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரி டிராக்டர் ஏற்றிக் கொலை

காங்கிரஸ் நிர்வாகி புகாரளிக்கவில்லை- காவல்துறை மறுப்பு

பொற்கொன்றை!

SCROLL FOR NEXT