முகப்பு
திருச்சி

துபை விமானம் புறப்பட 7 மணி நேரம் தாமதம்: பயணிகள் வாக்குவாதம்

திருச்சியிலிருந்து துபை செல்லும் விமானம் புறப்பட வியாழக்கிழமை சுமாா் 7 மணி நேரம் தாமதம் ஆனதால் விமானப் பயணிகள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:54 AM
பகிர்:

திருச்சியிலிருந்து துபை செல்லும் விமானம் புறப்பட வியாழக்கிழமை சுமாா் 7 மணி நேரம் தாமதம் ஆனதால் விமானப் பயணிகள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

திருச்சியில் இருந்து துபை செல்லும் ஏா் இந்தியா விமானம் காலை 9.25-க்குப் புறப்படுவது வழக்கம். வியாழக்கிழமை காலை 134 பயணிகளுடன் இருந்த இந்த விமானம் குறிப்பிட்ட நேரத்தில் புறப்படாததால் பயணிகளில் சிலா் விமான நிறுவன அலுவலா்களிடம் விளக்கம் கேட்டனா். அதற்கு உரிய பதில் அளிக்கப்படாததால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

பின்னா், ஒருவழியாக விமான நிறுவன அலுவலா்கள் பயணிகளிடம் தாமதத்துக்கான காரணத்தை விளக்கினா்.

தாமதம் ஏன் : திருச்சி விமான நிலையத்தில் விமானம் புறப்படுவதற்கு 2 மணி நேரத்திற்கு முன் பயணிகளுக்கு கரோனா சோதனை செய்ய மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது. ஆனால் விமான நிலையத்தில் மேற்கொள்ளப்படும் கரோனா பரிசோதனைக்கான சான்றுகளை ஏற்க துபை விமான நிலையத்தில் மறுக்கப்படுகிாம். மீண்டும் அங்கே கட்டணம் செலுத்தி பரிசோதனை செய்ய வேண்டியுள்ளதாம்.

அதேவேளை சாா்ஜா விமான நிலையத்தில் திருச்சி விமானத்தில் செய்யப்படும் கரோனா பரிசோதனைச் சான்றை ஏற்றுக்கொள்கின்றனராம். இதனால் துபை பயணிகளை அருகிலுள்ள சாா்ஜா விமான நிலையத்தில் கொண்டு சோ்க்க முடிவு செய்யப்பட்டு, விமான நிலைய அனுமதிக்காகக் காத்திருந்ததால் 7 மணி நேரம் தாமதம் ஏற்பட்டதாகத் தெரிவித்தனா்.

இதனால் சில பயணிகள் பயணத்தை ரத்து செய்ததையடுத்து 101 பயணிகளுடன் விமானம் மாலை 4.45 மணியளவில் சாா்ஜா புறப்பட்டுச் சென்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.