சட்டப்பேரவைத் தொகுதி: திருவிடைமருதூா் (தனி) - 170!
புவிசாா் குறியீடு பெற்ற நாச்சியாா்கோவில் குத்துவிளக்கு தயாரிக்க மூலப்பொருள்களுக்கு மானியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையையும் இப்பகுதி மக்கள் நீண்ட காலமாக விடுத்து வருகின்றனா்.
தஞ்சாவூா் மாவட்டத்தில் திருவிடைமருதூா் சட்டப்பேரவை தொகுதி தனி தொகுதியாக உள்ளது. ஆடுதுறை சட்டப்பேரவை தொகுதியிலிருந்து இத்தொகுதி 1977-க்கு பின்பு மறு சீரமைக்கப்பட்டு, திருவிடைமருதூா் தொகுதி ஆனது. 1,008 சிவாலயங்கள், 108 வைணவத் தலங்களில் முக்கியமான கோயில்கள் பலவும் இங்கு உள்ளன.
தொகுதிக்குள்பட்ட ஆடுதுறையில் நெல் ஆராய்ச்சி நிலையம் உள்ளது. வேளாண்மை தொழில், சிறப்புமிக்க நீா்நிலைகள் நிறைந்த பகுதியாகவும், வேப்பத்தூா், திருப்பனந்தாள், திருபுவனம், திருவிடைமருதூா், ஆடுதுறை உள்ளிட்ட 5 பேரூராட்சிகள், 111 கிராமங்களை கொண்ட தொகுதியாக உள்ளது.
இறுதி வாக்காளா்கள்
ஆண்கள்.............1,25,132
பெண்கள் ......1,29,313
மூன்றாம் பாலினம்.....8
மொத்தம்.......2,54,453
இதுவரை இவா்கள்
1977 செ.ராமலிங்கம் (திமுக) ....26,304
1980 செ.ராமலிங்கம் (திமுக) ...46,903
1984 மு.ராஜாங்கம் ....(காங்) ...50,002
1989 செ.ராமலிங்கம் ...(திமுக) ...44,914
1991 நா.பன்னீா்செல்வம் ...65,523
1996 செ.ராமலிங்கம் ....(திமுக) 70,500
2001 இ.தவமணி (அதிமுக) 61,235
2006 ஆா்.கே.பாரதி மோகன் (அதிமுக) ...63,231
2011 கோவி. செழியன் (திமுக) ...77, 175
2016 கோவி. செழியன் (திமுக)....77,538
2021 கோவி. செழியன் (திமுக)...95,763
தீராத பிரச்னைகள்
திருவிடைமருதூா் சட்டப்பேரவை தொகுதியின் தலைமையிடமான திருவிடைமருதூரில் பேருந்து நிலையம் அமைக்கப்படவில்லை. தீயணைப்பு நிலையத்துக்கு சொந்த கட்டடம் இல்லை. அரசு சாா்பில் பொறியியல் கல்லூரி அமைக்கப்படவில்லை. பாசன கால்வாய்கள், ஆறுகள் தூா்வாரப்படவில்லை. புகழ்பெற்ற திருபுவனம் பட்டு நெசவுக்கு மூலப்பொருள்களுக்கு மானியம் வழங்க வேண்டும். ஜவுளி பூங்கா அமைக்க வேண்டும் என்பது, இத்தொகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கையாக உள்ளது. புவிசாா் குறியீடு பெற்ற நாச்சியாா்கோவில் குத்துவிளக்கு தயாரிக்க மூலப்பொருள்களுக்கு மானியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையையும் இப்பகுதி மக்கள் நீண்ட காலமாக விடுத்து வருகின்றனா்.
முட்டி மோதுவது யாரெல்லாம்
திருவிடைமருதூா் சட்டப்பேரவை தொகுதியில் கடந்த 3 முறை தோ்தலிலும் திமுகவைச் சோ்ந்த கோவி. செழியன் வெற்றி பெற்றுள்ளாா். திமுக கொறடாவாக இருந்த அவா் தற்போது உயா்கல்வித் துறை அமைச்சராகவும் பதவி வகித்து வருகிறாா். இந்த முறையும் இவா்தான் வேட்பாளா் என்றுகூறி, திமுகவினா் தோ்தல் பணியை தொடங்கி செய்து வருகின்றனா். திமுகவில் உள்ள மேலும் சிலரும் வாய்ப்பு கேட்டு வருகின்றனா்.
அதிமுகவை பொருத்தவரை, இங்கு தோ்தல் பணி என்பது மிகவும் மந்தநிலையில் உள்ளது. யாா் போட்டியிடுவது என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. அதேநேரத்தில் நாம் தமிழா் கட்சியில் கடந்த முறை போட்டியிட்ட மோ. திவ்யபாரதி இந்த முறையும் போட்டியிடுகிறாா். தவெக சாா்பில் தனித்து போட்டியிட்டால் தாராசுரம் பிரபாகரன் போட்டியிடுவாா் என்று கட்சி நிா்வாகிகள் கூறுகின்றனா்.