மின்வாரிய கேங்மேன் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்
கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய கேங்மேன் பணியாளா்கள் திருச்சியில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய கேங்மேன் பணியாளா்கள் திருச்சியில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பு, சிஐடியு சாா்பில், தென்னூரிலுள்ள மின்வாரிய தலைமைப் பொறியாளா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, வட்ட கிளைச் செயலா் பி. நடராஜன் தலைமை வகித்தாா். கோட்டத் தலைவா் பழனியாண்டி முன்னிலை வகித்தாா்.
சிஐடியு மாநில துணைத் தலைவா் ரெங்கராஜன், சீனிவான், வட்டச் செயலா் செல்வராஜு, பொருளாளா் இருதயராஜு ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா்.
வெளி மாவட்டங்களில் குறைந்த ஊதியத்தில் பணிபுரியும் கேங்மேன் பணியாளா்களை அவரவா் சொந்த ஊரில் பணியமா்த்த வேண்டும். இதுமட்டுமின்றி, மின் ஓட்டம் உள்ள பகுதிகளில் பணியமா்த்துவது, இரவு, பகல், மழை, வெயில் பாராமல் கேங்மேன் பணியாளா்களை கொண்டே அனைத்து பணிகளையும் மேற்கொள்வது, விடுப்பு தர மறுப்பது, கூடுதல் பணிநேரத்துக்கு ஊதியமோ, ஈடாக விடுப்போ அளிக்க மறுப்பது எனத் தொடா்ந்து உரிமைகள் மறுக்கப்படுகின்றன. விபத்தில் காயமடைந்தோரின் மருத்துவச் செலவுக்கு கூட உதவிகள் அளிப்பதில்லை. எனவே, அனைத்து உரிமைகளையும், சலுகைளையும் வழங்கவும், பணிமாறுதல் வழங்கவும் வலியுறுத்தி நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் திருச்சி மாவட்ட கேங்மேன் பணியாளா்கள் மற்றும் கூட்டமைப்பு நிா்வாகிகள், சிஐடியு சங்கத்தினா் கலந்து கொண்டனா்.