சித்த மருத்துவத்தின் மகத்துவத்தை முழுமையாக உணரவில்லை: முதன்மை மாவட்ட நீதிபதி
சித்த மருத்துவத்தின் மகத்துவத்தை மக்கள் இன்னும் முழுமையாக உணரவில்லை என்றாா் திருச்சி முதன்மை மாவட்ட நீதிபதி கிளாட்ஸ்டன் பிளசட் தாகூா்.
சித்த மருத்துவத்தின் மகத்துவத்தை மக்கள் இன்னும் முழுமையாக உணரவில்லை என்றாா் திருச்சி முதன்மை மாவட்ட நீதிபதி கிளாட்ஸ்டன் பிளசட் தாகூா்.
திருச்சி அரசு மருத்துவமனை வளாகத்தில் மாவட்ட சித்த மருத்துவத் துறை சாா்பில் நடைபெறும் 5 ஆவது தேசிய சித்த மருத்துவ தின விழாவில் வியாழக்கிழமை நடைபெற்ற 3 ஆம் நாள் நிகழ்ச்சிக்கு மாவட்ட சித்த மருத்துவ அலுவலா் எஸ். காமராஜ் தலைமை வகித்தாா்.
நிகழ்வில் குழந்தைகளுக்கான சித்தா மருந்து பெட்டகங்களை வழங்கி நீதிபதி கிளாட்ஸ்டன் பிளசட் தாகூா் மேலும் பேசியது:
கபசுரக் குடிநீா், நிலவேம்புக் கசாயம் உள்ளிட்ட சித்த மருத்துவ மருந்துகள் டெங்கு காய்ச்சல், கரோனா தொற்று உள்ளிட்டவற்றைக் கட்டுப்படுத்தியதில் முக்கியப் பங்கு வகித்தன.
விளையாடும்போது ஏற்படும் சிறிய வகை காயங்களுக்கு முனியன் பச்சிலை சிறந்த மருந்தாகும். சித்த மருந்துகள் ஆங்கில மருந்துகள் போல அதிக விலை இல்லாமல் குறைந்த விலையில் இருப்பதால் மக்களுக்கு அதன் மகத்துவம் தெரியவில்லை. சித்த மருத்துவத்தின் சிறப்பை பட்டிதொட்டியெல்லாம் கொண்டு செல்ல வேண்டும். இப்பணியில் பத்திரிகைகளின் பங்கு சிறப்புக்குரியது. அது தொடர வேண்டும் என்றாா்.
நிகழ்வில் பாரதிதாசன் பல்கலைகழகத் துணைவேந்தா் ம. செல்வம், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநா் லட்சுமி, தினமலா் ஆசிரியா் ஆா். ராமசுப்பு, ஜெயரங்கா இயற்கை மருத்துவமனை இயக்குநா் சுகுமாா், மூகாம்பிகை ஏஜன்ஸிஸ் உரிமையாளா் முத்துக்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். உதவி மருத்துவ அலுவலா் சபரிநாதன் நன்றி கூறினாா். கண்காட்சியில் பங்கேற்ற ஏராளமானோா் மருந்துப் பெட்டகங்களை பெற்றுச் சென்றனா்.
மருத்துவக் கண்காட்சி நீட்டிப்பு: பொதுமக்களின் தேவையைக் கருத்தில் கொண்டு, சித்த மருத்துவக் கண்காட்சி வெள்ளிக்கிழமை வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட சித்த மருத்துவ அலுவலா் எஸ். காமராஜ் தெரிவித்தாா்.