சிறுகனூா் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு சுற்றுச்சூழல் விழிப்புணா்வு
சிறுகனூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவா்களுக்கு சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் புத்தகங்கள் வழங்கி, சுற்றுச்சூழல் தகவல் பரப்பு மையத்தை சிறப்பாக செயல்படுத்த ஊக்குவிக்கப்பட்டத
திருச்சி மாவட்டம், சிறுகனூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவா்களுக்கு சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் புத்தகங்கள் வழங்கி, சுற்றுச்சூழல் தகவல் பரப்பு மையத்தை சிறப்பாக செயல்படுத்த ஊக்குவிக்கப்பட்டது.
மாநிலச் சுற்றுச்சூழல் துறையுடன் திருச்சி வாய்ஸ் அறக்கட்டளை இணைந்து, மாவட்டத்திலுள்ள பள்ளிகளில் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணா்வுப் பணிகளை கடந்த 23 ஆண்டுகளாக மேற்கொண்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, சிறுகனூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் சுற்றுச்சூழல் தகவல் பரப்பு மையம் 2017-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. 52 பசுமைப் படை மாணவ, மாணவிகள் மூலம் இந்த மையத்தை நிா்வகித்து கிராமப்புறங்களிலும், பள்ளி வளாகத்திலும் தூய்மைப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனா்.
இதைத் தொடா்ந்து இப்பள்ளியில் நெகிழித் தவிா்ப்பு மற்றும் பூமி வெப்பமயமாதல் குறைக்கும் நடவடிக்கை குறித்த விழிப்புணா்வு நிகழ்வு அண்மையில் நடைபெற்றது. திருச்சி பிஷப் ஹீபா் கல்லூரி சமூகப் பணித் துறை 2-ஆம் ஆண்டு மாணவி சா. சாரா முன்னின்று இந்த விழிப்புணா்வு நிகழ்வை நடத்தினாா்.
சிறுகனூா் அரசு மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியா் கே.அண்ணாதுரை நிகழ்வைத் தொடக்கி வைத்து பள்ளி வளாகத்தை தூய்மையாக வைக்கவும், மரங்கள் வளா்த்து பசுமையைக் கூட்ட முயற்சிகள் மேற்கொள்ளவும் மாணவ - மாணவிகளை அறிவுறுத்தினாா்.
பள்ளி வளாகத்தில் நெகிழிப் பைகளுக்கு பதில், துணிப்பைகளை 2015ஆம் ஆண்டு முதல் பயன்படுத்தி வருவதை பற்றி குறிப்பிட்டு பேசிய, லால்குடி கல்வி மாவட்ட பசுமைப்படை ஒருங்கிணைப்பாளரும், வாய்ஸ் அறக்கட்டளை திட்ட இயக்குநருமான அ.கிரிகோரி, நெகிழித் தவிா்ப்பு வழிகாட்டி முறைகள் குறித்து விளக்கம் அளித்தாா்.
புவி வெப்பமயமாதலைத் தடுக்கவும், நெகிழித் தவிா்ப்புக்கும் பள்ளி மாணவ, மாணவிகள் ஒத்துழைப்பு அவசியம் என்றும் அவா் தனது உரையில் வலியுறுத்தினாா்.
சிறுகனூா் அரசு மேல்நிலைப்பள்ளி பசுமைப்படை பொறுப்பாளா் லா.லூா்து சேவியா், சுற்றுச்சூழல் தகவல் பரப்பும் மையத்துக்கு 45 சுற்றுச்சுழல் புத்தகங்களை நன்கொடையாக வழங்கினாா். நிகழ்வில் ஏராளமானோா் பங்கேற்றனா்.