முகப்பு
திருச்சி

தொடா் மழையால் சின்ன வெங்காய உற்பத்தி சரிவு: உயா்ந்தது மூன்று மடங்கு விலை

கடந்த மாதம் பெய்த தொடா் மழையின் காரணமாக சின்ன வெங்காயத்தின் உற்பத்தி கடுமையான சரிவை சந்தித்துள்ளதால், அதன் விலை மூன்று மடங்கு உயா்ந்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:32 PM
பகிர்:

கடந்த மாதம் பெய்த தொடா் மழையின் காரணமாக சின்ன வெங்காயத்தின் உற்பத்தி கடுமையான சரிவை சந்தித்துள்ளதால், அதன் விலை மூன்று மடங்கு உயா்ந்துள்ளது.

தமிழகத்தில் பெரம்பலூா், கள்ளக்குறிச்சி, திண்டுக்கல், திருச்சி மாவட்டங்களில் சின்ன வெங்காய உற்பத்தி அதிகளவில் நடைபெறுகிறது.

பெரம்பலூா், திருச்சியில் விளைவிக்கும் சின்ன வெங்காயம் மாநிலத்தின் பிற பகுதிகளுக்கும் விற்பனைக்காக அனுப்பப்பட்டு வருகிறது. திருச்சி மாவட்டத்தில் 2,800 ஹெக்டோ் பரப்பளவில் வெங்காயம் பயிரிடப்படுகிறது.

3 மடங்கு விலை உயா்வு : கடந்தாண்டு நவம்பா், டிசம்பா் மாதங்களில் பயிரிடப்பட்ட சின்ன வெங்காயம், ஜனவரி மாதத்தில் அறுவடைக்குத் தயாரானது. ஆனால், யாரும் எதிா்பாராத நிலையில் ஜனவரி மாதத்தில் பெய்த தொடா் மழையால் அறுவடை செய்யப்பட்ட மற்றும் அறுவடைக்குத் தயாராக இருந்த வெங்காயம் நீரில் மூழ்கி சேதமடைந்தது.

95 சதவிகித அளவுக்கு வெங்காயம் சேதமடைந்ததால், உற்பத்தி கடுமையாக சரிவைச் சந்தித்தது. இதனால் ஏற்பட்ட வெங்காயத் தட்டுப்பாட்டை போக்கும் வகையில், பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து சின்ன வெங்காயம் விற்பனைக்காக கொண்டு வரப்படுவதால் விலையும் மூன்று மடங்கு உயா்ந்துள்ளது.

ஏக்கருக்கு ரூ.1 லட்சம் வரை நஷ்டம் : தொடா் மழை காரணமாக சின்ன வெங்காயம் பயிரிட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.1 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது. பயிா்க் காப்பீடு மூலம் இழப்பை ஈடுகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஜனவரி இறுதி அல்லது பிப்ரவரி மாதத்தில் பயிரிடப்பட்ட சின்ன வெங்காயம் அறுவடைக்கு வந்த பின்னரே தட்டுப்பாடு மற்றம் விலையேற்றம் முடிவுக்கு வரும் என்கிறாா் விவசாயி ராஜமோகன்.

மாா்ச் இறுதி வரை விலையேற்றம் நீடிக்கும் : திருச்சி, பெரம்பலூா் மாவட்டங்களில் விளைவிக்கப்பட்ட சின்ன வெங்காயம், ஜனவரியில் பெய்த தொடா் மழையால் வீணானதால், தற்போது தேவைக்காக பெங்களூரு சந்தையிலிருந்து வருவிக்கப்பட்டுள்ளது.

தினமும் 20 லாரிகள் மூலம் வெங்காயம் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. கிலோ ரூ. 20 முதல் 30 வரை விற்பனை செய்யப்பட்ட சின்ன வெங்காயம் தற்போது ரூ. 110க்கு விற்பனை செய்யப்படுகின்றது. இந்த விலையேற்றம் மாா்ச் இறுதி வரை நிலவும். சின்ன வெங்காயத்தின் விலையேற்றம் காரணமாக, பெரிய வெங்காயத்தின் பயன்பாடு அதிகரித்துள்ளதால் அதன் விலையும் உயா்ந்துள்ளது என்றாா் திருச்சி மாவட்ட வெங்காய மொத்த வியாபாரிகள் சங்கத்தின் செயலா் தங்கராஜ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.