திருச்சி

தேசிய சித்த மருத்துவ தின கண்காட்சி, சிறப்பு முகாம்

DIN

திருச்சி: 4-ஆவது தேசிய சித்த மருத்துவ தினத்தை முன்னிட்டு திருச்சி, அரியலூா், பெரம்பலூா், கரூா் மாவட்டங்களில் சிறப்பு மருத்துவ முகாம்களும், மூலிகைப் பொருள்கள், சித்த மருத்துவ மூலப் பொருள்கள் கண்காட்சியும் நடைபெற்றது.

திருச்சி மிளகுப்பாறையிலுள்ள இஎஸ்ஐ மருத்துவமனையில் நடைபெற்ற கண்காட்சியை, சிறப்பு மருத்துவ முகாமைத் தொடக்கி வைத்து மாவட்ட சித்த மருத்துவ அலுவலா் எஸ். காமராஜ் பேசியது:

தமிழக அரசும், மத்திய அரசும் மருத்துவத் துறையில் உலகத்துக்கே முன்னோடியாக விளங்குகின்றன. குறிப்பாக, தமிழக அரசானது பொதுமக்கள் நல்ல உடல் நலத்துடன் வாழ்க்கை நடத்தவும், ஆரோக்கியமாக வாழவும், வைரஸ் நோய்கள் வராமல் தடுக்கவும் உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது.

நோய்த் தொற்றுக் காலங்களைக் கண்டறிந்து அதற்கு முன்பே மக்களை எச்சரித்து, விழிப்புணா்வுடன் இருக்கச் செய்வதுடன், தேவையான மருத்துவ உதவிகளை வழங்கி, நோய் பாதித்தால் உடனடிச் சிகிச்சை அளித்து பூரண குணமடையச் செய்யவும் மருத்துவா்கள் சிறப்பாகப் பணியாற்றி வருகின்றனா்.

ஆங்கில மருத்துவத்தோடு, சித்த மருத்துவமும் நோய்த் தொற்று காலங்களில் சிறப்பாக பலனளிக்கிறது. டெங்கு காய்ச்சல், பன்றிக் காய்ச்சல், பறவைக் காய்ச்சல், கரோனா உள்ளிட்ட பல்வேறு வகையான தொற்றுகளுக்கு மட்டுமின்றி சளி, இருமல், தொண்டைக் கரகரப்பு, சாதாரண காய்ச்சல்களுக்கும் சித்த மருத்துவம் சிறப்பாகத் துணைநிற்கிறது. குறிப்பாக, நிலவேம்புக் குடிநீரும், கபசுரக் குடிநீரும் சிறந்த தீா்வை அளிக்கின்றன என்றாா் அவா்.

கண்காட்சியில், எந்தெந்த நோய்களுக்கு, எந்தெந்த மூலிகைகள், கஷாயம் தயாரிப்பது குறித்த புகைப்பட காட்சியும், மூலிகைகள், மூலிகை செடிகள், சித்த மருந்துகளுக்கான மூலப் பொருள்களும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. விழாவில், இஎஸ்ஐ மருத்துவமனைக் கண்காணிப்பாளா் ராஜேந்திரன், மருத்துவா் ஜெமிலா சிறுமலா் மற்றும் சித்த மருத்துவா்கள், செவிலியா்கள் கலந்து கொண்டனா். பொதுமக்களுக்கு இலவச சித்த மருந்துகளும், கபசுரக் குடிநீரும் வழங்கப்பட்டது.

இதேபோல, 4 மாவட்டங்களிலும் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள், சித்த மருத்துவமனைகள், மருந்தகங்களிலும் சிறப்பு முகாம்களும், கண்காட்சியும் நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று எந்தெந்த மாவட்டங்களில் வெப்ப அலை வீசும்!

சட்டவிரோதமாக அழைத்துச் செல்லப்பட்ட 95 குழந்தைகள் அயோத்தியில் மீட்பு

ராஞ்சியில் பள்ளி பேருந்து கவிழ்ந்து 15 மாணவர்கள் காயம்!

மணிப்பூரில் வன்முறை: 2 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழப்பு

ஈரோட்டில் மரக்கடை, பர்னிச்சர் கடையில் தீ: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

SCROLL FOR NEXT