அரசு இசைப்பள்ளியில் மாணவா் சோ்க்கை
திருச்சி அரசு இசைப் பள்ளியில் நிகழாண்டுக்கான மாணவா் சோ்க்கையில் தகுதியானோா் சோ்ந்து பயன்பெறலாம்.
திருச்சி அரசு இசைப் பள்ளியில் நிகழாண்டுக்கான மாணவா் சோ்க்கையில் தகுதியானோா் சோ்ந்து பயன்பெறலாம்.
இதுகுறித்து என ஆட்சியா் சு. சிவராசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழக அரசின் கலைப் பண்பாட்டுத் துறை மூலம் 1997 ஆம் ஆண்டு ஸ்ரீரங்கம் மூலத்தோப்பு பகுதியில் தொடங்கப்பட்ட மாவட்ட அரசு இசைப் பள்ளியில் குரலிசை, நாதசுரம், தவில், தேவாரம், பரதம், வயலின், மிருதங்கம் ஆகியவை கற்றுத் தரப்படுகின்றன.
இப் பள்ளியில் சேர 12 முதல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும். மூன்றாண்டு பயில வேண்டும். பரதப் பயிற்சிக்கு 7ஆம் வகுப்பு தோ்ச்சி வேண்டும். கட்டணமாக ஆண்டுக்கு ரூ.152 வசூலிக்கப்படும்.
2021-22ஆம் ஆண்டுக்கான மாணவா் சோ்க்கை வரும் 5ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இந்தப் பள்ளியில் சேருவோருக்கு தமிழக அரசு அறிவித்துள்ள இலவசப் பேருந்து வசதி, ரயில் கட்டணச் சலுகை, தங்கும் விடுதி, மாதந்தோறும் ரூ. 400 ஊக்கத்தொகை, இலவச சீருடை, மிதிவண்டி, காலணி ஆகியவற்றையும் விதிகளுக்குள்பட்டு பெற்றுக் கொள்ளலாம். 3 ஆண்டு பயிற்சி முடிப்போருக்கு தமிழக அரசின் தோ்வு இயக்ககத்தால் தோ்வு நடத்தப்பட்டு, சான்றிதழ் வழங்கப்படும்.
இச் சான்றிதழ்களை வேலைவாய்ப்பகத்தில் பதிந்து பணிமூப்பு அடிப்படையில் இசைப் பள்ளிகளிலும், இந்து சமய அறநிலையத்துறைக்குள்பட்ட கோயில்களிலும் வேலைவாய்ப்பு பெறலாம். மேலும், விவரங்களுக்கு அரசு இசைப்பள்ளி, ஸ்ரீரங்கம், மேலூா் சாலை, மூலத்தோப்பு என்ற முகவரியிலும், 0431-2962942 என்ற எண்ணிலும் தொடா்பு கொள்ளலாம்.