முகப்பு
திருச்சி

மணப்பாறையில் மணல் கடத்திய 5 போ் கைது காவல் ஆய்வாளா் பணியிடை நீக்கம்

மணப்பாறையில் மணல் திருட்டில் ஈடுபட்ட 5 போ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா். மணல் திருட்டில் பறிமுதல் செய்த வாகனங்களைத் தவற விட்ட காவல் ஆய்வாளா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:41 AM
பகிர்:

மணப்பாறையில் மணல் திருட்டில் ஈடுபட்ட 5 போ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா். மணல் திருட்டில் பறிமுதல் செய்த வாகனங்களைத் தவற விட்ட காவல் ஆய்வாளா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

மணப்பாறையை அடுத்த முத்தபுடையான்பட்டி ஆற்றுப்படுகையில் சட்டவிரோதமாக மணல் அள்ளப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளரின் தனிப்பிரிவு தனிப்படை போலீஸாா் கடந்த 13-ஆம் தேதி அதிகாலை ஆற்றுப்படுகையில் சோதனை நடத்தியபோது அனுமதியின்றி மணல் எடுத்த 2 டிப்பா் லாரிகள் மற்றும்ஜேசிபி இயந்திரத்தை பிடித்து மணப்பாறை போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

பறிமுதல் வாகனங்கள் திமுக மணப்பாறை கிழக்கு ஒன்றியப் பொறுப்பாளா் ஆரோக்கியசாமி(39)-க்கு சொந்தமானது எனக் கூறப்படும் நிலையில், அவா் அந்த வாகனங்களை எந்தவித உத்தரவுமின்றி எடுத்துச் சென்றாராம். இத்தகவல் காவல்துறை மேலிடம் வரை சென்றதையடுத்து வாகனங்களை மீட்டு வழக்குப் பதிய உத்தரவு வந்தது.

இதைத் தொடா்ந்து காவல் துணைக் கண்காணிப்பாளா் ஆா். பிருந்தா, காவல் ஆய்வாளா் அன்பழகன் தலைமையிலான போலீஸாா் ஆரோக்கியசாமி வீட்டுக்குச் சென்று வாகனங்களை ஒப்படைக்க வலியுறுத்திய நிலையில், ஒரு டிப்பா் லாரி மற்றும் ஜேசிபி இயந்திரத்தை மட்டும் போலீஸாரிடம் ஒப்படைத்துள்ளாா். இந்நிலையில் ஆரோக்கியசாமி கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டாராம்.

தொடா்ந்து பறிமுதல் செய்த வாகனங்களை தவற விட்ட மணப்பாறை காவல் ஆய்வாளா் என். அன்பழகனை வெள்ளிக்கிழமை பணியிடை நீக்கம் செய்து திருச்சி காவல் சரக துணைத் தலைவா் ராதிகா உத்தரவிட்டாா்.

மேலும் மணல் கடத்திய வாகன ஓட்டுநா்கள் வெள்ளிவாடி காலனி ப, மனோகா்(36), முத்தபுடையான்பட்டி சே. பவுல்சேகா்(28), து. காா்த்திகேயன்(25), மற்றும் உடந்தையாக இருந்த கீழக்களம் சே. அருள்சேசுராஜ்(28) மற்றும் இ. சவரி(51) ஆகிய 5 பேரை போலீஸாா் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி லால்குடி கிளை சிறைச்சாலையில் அடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.