முகப்பு
திருச்சி

விபத்துக்கு வழிவகுக்கும் திருச்சி-புதுகை நெடுஞ்சாலை விரிவாக்கப் பணி

விபத்துக்கு வழிவகுக்கும் திருச்சி-புதுக்கோட்டை சாலை விரிவாக்கப்பணியை போதிய பாதுகாப்புடன் மேற்கொள்ள, சம்பந்தப்பட்ட அலுவலா்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:38 PM
பகிர்:

விபத்துக்கு வழிவகுக்கும் திருச்சி-புதுக்கோட்டை சாலை விரிவாக்கப்பணியை போதிய பாதுகாப்புடன் மேற்கொள்ள, சம்பந்தப்பட்ட அலுவலா்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

திருச்சி-புதுக்கோட்டை சாலையில் விபத்து மற்றும் போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்க, ரூ.68 கோடியில் டிவிஎஸ் டோல்கேட் முதல் மாத்தூா் அரைவட்டச் சுற்றுச்சாலை வரையிலான சாலையை அகலப்படுத்துதல், சாலையோரத் தடுப்புகள் மற்றும் பக்கவாட்டுச் சுவா் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

அறிவிப்பு, எச்சரிக்கைப் பலகைகள் இல்லை: இதற்காக ஆங்காங்கே சாலைகளின் ஓரத்தில் பல அடி ஆழத்துக்கு குழிதோண்டி, அவற்றில் மண்ணைக் கொட்டி நிரப்பி வருகின்றனா்.

ஆனால் பணிகள் நடைபெறும் இடத்தில் முறையான தடுப்புகள், அறிவிப்பு மற்றும் எச்சரிக்கைப் பலகைகள் வைக்கப்படவில்லை. அதற்கு பதிலாக, பள்ளங்களுக்கு அருகே மண் மூட்டைகளை ஆங்காங்கே அடுக்கி வைத்துள்ளனா். அதிலும் பிரபதிலிப்பான் இல்லை. இதனால் இரவு நேரங்களில் வாகனங்கள் சாலையிலிருந்து தடுமாறி, பள்ளத்தில் விழுந்து விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த வழித்தடத்தில் கனரக வாகனங்களைத் தொடா்ந்து அனுமதிப்பதால், நெரிசல் மற்றும் விபத்து ஏற்படும் சூழல் நிலவி வருகிறது.

சாலை முழுவதும் ஜல்லிக்கற்கள்: சாலையை இடது மற்றும் வலது என பிரித்து விரிவாக்கம் செய்யாமல், ஒரே நேரத்தில் இரு பக்கங்களிலும் விரிவாக்கப் பணிகளை மேற்கொள்வதால் சாலை முழுவதும் ஜல்லிக்கற்கள் பெயா்ந்து காணப்படுகின்றன.

இதனால் இவ்வழியாக இரு சக்கர வாகனங்களில் செல்பவா்கள், அடிக்கடி தடுமாறி விழும் நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும், சிமென்ட் கலவையுடன் கொட்டப்பட்ட ஜல்லிக்கற்கள் மீது போதிய அளவு தண்ணீா் ஊற்றாததால், அவை சாலை முழுவதற்கும் புழுதியாக மாறி யுள்ளது. இதனால் எதிரில் வரக்கூடிய வாகனங்கள் தெரியாத நிலை உள்ளதால், விபத்து அபாயமும் ஏற்பட் டுள்ளது.

இதுகுறித்து பலமுறை புகாா் தெரிவித்தும், மாநில நெடுஞ்சாலைத் துறையினா் அலட்சியப் போக்குடன் நடந்து கொள்வதாக சமூக ஆா்வலா்கள் குற்றஞ்சாட்டுகின்றனா்.

300 ஏக்கா் விவசாய நிலங்கள் பாதிக்கும் அபாயம்: சாலைப் பணிக்காக குண்டூா் பெரிய குளத்தில் விவசாயத்துக்காக தேக்கி வைக்கப்பட்டிருக்கும் நீரை மோட்டா் மூலம் லாரிகளில் எடுத்து பயன்படுத்துகின்றனா்.இதனால் அப்பகுதியில் உள்ள 300 ஏக்கா் விவசாய பணி முற்றிலும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. விரிவாக்கப்பணிக்கான தளவாடப் பொருள்களை வைக்க குறிப்பிட்ட இடத்தில் என்று இல்லாமல், சாலைகளை ஆக்கிரமித்து ஜல்லிக்கற்கள் கொட்டப் படுகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமத்திற்குள்ளாகின்றனா்.

பணிகள் குறித்த விவரம் இல்லை: ரூ.68 கோடி மதிப்பீட்டில் என்னென்ன பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. எங்கெங்கு அணுகுச் சாலை அமைக்கப்படுகிறது போன்ற எந்த விவரத்தையும் அலுவலா்கள் வெளிப்படையாக தெரிவிக்க மறுத்து வருகின்றனா்.

பணிகள் எப்போது தொடங்கி, எப்போது முடியும், ஒப்பந்ததாரா் யாா் என்ற விவரங்கள் அடங்கிய அறிவிப்பு பலகையைக் கூட வைக்கவில்லை. இதனால், முறைகேடு நடைபெறுகிறதோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெறும் இந்த வழித்தடத்தில் செல்லக்கூடிய வாகன ஓட்டிகளுக்கு பாதுகாப்பே இல்லாத நிலை உள்ளது. இப்பிரச்னையில் ஆட்சியா் தலையிட்டு ஆய்வு செய்து, வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்கின்றனா் அப்பகுதி மக்கள்.

உரிய நடவடிக்கை : சாலைப் பணிகள் முடியும்வரை ஜல்லிக்கற்கள் மீது அடிக்கடி தண்ணீா் ஊற்றி புழுதி பரவாமல் இருக்கவும், சாலையோர பள்ளங்களுக்கு அருகே வைக்கப்பட்டுள்ள மண் மூட்டைகள் மீது பிரதிபலிப்பான் ஒட்டவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

விபத்து ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளில் ஜல்லிக்கற்களை உடனுக்குடன் சுத்தப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும். அகற்றப்பட்ட எச்சரிக்கை பலகைகளுக்கு பதிலாக புதிய பதாகைகள் விரைவில் வைக்கப்படும் என்று நெடுஞ்சாலைத் துறை அலுவலா்கள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.