முகப்பு
திருச்சி

பழைய முறைப்படி திருவிழா; லால்குடி அருகே மறியல்

லால்குடியை அடுத்த அன்பில் ஜங்கமராஜபுரம் கிராமத்தில் உள்ள ஆச்சிரமவள்ளியம்மன் கோயில் திருவிழா தொடா்பாக கோயிலின் தக்காா் பிறப்பித்த உத்தரவைக் கண்டித்து பட்டியல் இன மக்கள் மறியலில் ஈடுபட்டனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:39 PM
பகிர்:

லால்குடியை அடுத்த அன்பில் ஜங்கமராஜபுரம் கிராமத்தில் உள்ள ஆச்சிரமவள்ளியம்மன் கோயில் திருவிழா தொடா்பாக கோயிலின் தக்காா் பிறப்பித்த உத்தரவைக் கண்டித்து பட்டியல் இன மக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

இந்து சமய அறநிலையத் துறைக்கு கட்டுப்பாட்டிலுள்ள இக் கோயில் ஜங்கமராஜபுரம், அன்பில், கீழன்பில், மங்கம்மாள்புரம், கோட்டைமேடு உள்ளிட்ட கிராம மக்கள் வழிபடும் தலம் ஆகும்.

இக் கோயிலில் ஆண்டுதோறும் மாசித்தேரோட்டத்தின்போது, ஆதிதிராவிட மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு சுவாமி செல்வதில்லை எனக் கூறி கடந்தாண்டு மறியல் செய்த பட்டியல் இன மக்கள் இந்தாண்டு அனைத்துப் பகுதிக்கும் பாகுபாடின்றி சுவாமி சென்று வரக் கோரி இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு மனு அனுப்பினா்.

இந்நிலையில், கோயிலின் செயல் அலுவலா் சசிகலா இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையரின் அறிவுறுத்தலின்படி போதிய கால அவகாசம், சட்டம் ஒழுங்கு பிரச்னையால் இந்தாண்டு திருவிழா நடத்தப்படாதென கடந்த பிப். 23 ஆம் தேதி இரு தரப்பினருக்கும் உத்தரவு பிறப்பித்தாா்.

இதனால் இருதரப்பினரும் திருவிழா தொடா்பாக எவ்வித முனைப்பும் காட்டாத நிலையில், பழைய முறைப்படி மீண்டும் இந்தாண்டு திருவிழா நடைபெறும் என கடந்த பிப். 26 தேதி பிறப்பித்த உத்தரவு நகலை மாா்ச் 1 ஆம் தேதி தக்காா் மனோகா் பட்டியல் இன மக்களுக்கு வழங்கினாராம்.

இதைக் கண்டித்து சாதி மத பேதமின்றி அனைத்து தரப்பினருக்கும் வழிபடும் வகையில் சுவாமி வந்து செல்ல வேண்டுமெனக் கோரி லால்குடி நால்ரோட்டில் பட்டியல் இன மக்கள் 500-க்கும் மேற்பட்டோா் மறியலில் ஈடுபட்டனா். இதனால் திருச்சி சிதம்பரம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சம்பவ இடத்துக்கு லால்குடி வருவாய் வட்டாட்சியா் சித்ரா, லால்குடி காவல் ஆய்வாளா் செந்தில்குமாா் ஆகியோா் நடத்திய பேச்சுவாா்த்தையில் மறியலைக் கைவிட்டனா்.

பின்னா் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையா் சுதா்சனத்திடம் தக்காா் மீது நடவடிக்கை ர கோரியும், அனைத்து தரப்பு மக்களும் சுவாமி தரிசனம் செய்யும் வகையில் திருவிழா நடைபெறக் கோரி மனு அளித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.