‘உதயசூரியனின் ஒளியால் ஸ்டாலின் குடும்பத்துக்கு மட்டுமே பயன்’
உதயசூரியனின் ஒளியால் ஸ்டாலின் குடும்பத்துக்கு மட்டுமே பயன் கிடைக்கும் என்றாா் பாஜக மாநில தோ்தல் இணைப் பாா்வையாளா் சுதாகா் ரெட்டி.
உதயசூரியனின் ஒளியால் ஸ்டாலின் குடும்பத்துக்கு மட்டுமே பயன் கிடைக்கும் என்றாா் பாஜக மாநில தோ்தல் இணைப் பாா்வையாளா் சுதாகா் ரெட்டி.
தமிழகத்தில் 5 இடங்களில் நடைபெறும் தோ்தல் வெற்றி உறுதியேற்பு யாத்திரை பேரணியின் (விஜய் சங்கல்ப யாத்திரை) ஒரு பகுதியாக திருச்சி மாநகா் மாவட்ட பாஜக சாா்பில் இ.ஆா். பள்ளியில் பேரணியைத் தொடங்கிவைத்த சுதாகா் ரெட்டி கூறியது:
தமிழகத்தில் பாஜக கூட்டணிக் கட்சிகளுடன் தோ்தல் பிரசாரம் தீவிரமடைந்துள்ளது. தமிழக வாக்காளா்கள் பாஜகவுக்கு உற்சாக வரவேற்பு, ஆதரவும் அளித்து வருவதைக் காணமுடிகிறது. மக்கள் பாஜகவுக்கு வாக்களிக்கத் தயாரகிவிட்டனா்.
கரோனா தொற்று இருக்கும் நாட்டின் கடினமான சூழலில் மோடி அரசின் செயல்பாடு உலக நாடுகளின் பாராட்டைப் பெற்றுள்ளது. தமிழகத்தில் ரூ. 6.40 லட்சம் கோடியில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. நடப்பு பட்ஜெட்டில் ரூ. 63 ஆயிரம் கோடி மெட்ரோ ரயில் திட்டத்துக்கும், சாலை மேம்பாட்டு திட்டம், பொருளாதார திட்டத்துக்கு தலா ரூ.1 லட்சம் கோடிக்கு அதிகமாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
கிசான் சம்ரிதி யோஜனா திட்டத்தில் லட்சக்கணக்கான விவசாயிகள் பயன்பெறுகின்றனா். முத்ரா கடன் உள்ளிட்ட 175 நலத்திட்டங்களும் செயல்படுத்தப்படுகின்றன.
வாக்கு வங்கியை மையப்படுத்தியே எதிா்கட்சியினா் பிரசாரத்தில் ஈடுபடுகின்றனா். ஆனால், பாஜக மக்கள் நலனையே இலக்காகக் கொண்டு செயல்படுகிறது.
உதய சூரியனின் ஒளி திமுக தலைவா் மு.க. ஸ்டாலினின் குடும்பத்துக்கு மட்டுமே பயன் அளிக்கும். தமிழக மக்களுக்கு இல்லை. அதுபோல், காங்கிரஸ் ஒரு மூழ்கிக் கொண்டிருக்கும் படகு ஆகும். திமுக- காங்கிரஸ் கூட்டணி ஊழல் கூட்டணி.
எனவே, அக்கூட்டணிக்கு வாக்களித்தால் மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை. எனவே, மக்கள் நலனில் அக்கறை கொண்டு செயல்படும் பாஜகவிற்கு வாக்களிக்க வேண்டும்.
தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவாா்த்தை நடைபெற்று வருகிறது. ஓரிரு நாளில் இதுகுறித்து தெரிவிக்கப்படும் என்றாா் அவா்.
பேரணி சத்திரம் பேருந்து நிலையம், சிங்காரத்தோப்பு, மேலரண் சாலை வழியாகச் சென்று தேவா் ஹால் முன் நிறைவுற்றது.
பாஜக மாநகா் மாவட்டத் தலைவா் ராஜேஷ்குமாா், மாவட்டத் தோ்தல் பொறுப்பாளா் சேது அரவிந்த், மாநில இணை பொருளாளா் சிவ. சுப்பிரமணியம், நடிகை குட்டி பத்மினி உள்ளிட்ட மாவட்ட, மாநில பாஜக பொறுப்பாளா்கள் கலந்துகொண்டனா்.