முகப்பு
திருச்சி

திருச்சி, ராணிப்பேட்டை பெல் ஆலைகளில் ஆக்சிஜன் உற்பத்தி

பாரதமிகு மின் நிறுவனம் (பெல்) மூலம் திருச்சி, ராணிப்பேட்டையில் உள்ள ஆலைகள் மூலம் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கப்படுவதாகவும், 40 நாள்களுக்குள் தமிழகத்துக்கு ஆக்சிஜன் கிடைக்கும்

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:16 PM
பகிர்:

பாரதமிகு மின் நிறுவனம் (பெல்) மூலம் திருச்சி, ராணிப்பேட்டையில் உள்ள ஆலைகள் மூலம் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கப்படுவதாகவும், 40 நாள்களுக்குள் தமிழகத்துக்கு ஆக்சிஜன் கிடைக்கும் எனவும் தமிழக நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் கே.என். நேரு தெரிவித்தாா்.

தமிழகத்தில் கரோனா தொற்றின் 2ஆம் அலை வேகமாகப் பரவி வருவதால், நோயாளிகளுக்கான ஆக்சிஜன் தேவையும் அதிகரித்து வருகிறது. ஆக்சிஜன் பற்றாக்குறையால் நோயாளிகள் உயிரிழப்பதைத் தடுக்க உற்பத்திக்கு சாத்தியமான இடங்களில் ஆக்சிஜன் உற்பத்தியைத் தொடங்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்டம், திருவெறும்பூரில் உள்ள பெல் நிறுவனத்தில் ஆக்சிஜன் உற்பத்தியைத் தொடங்க ஆலோசிக்கப்பட்டு வந்தது.

இந்நிறுவனத்தில், 1980 ஆம் ஆண்டு முதல் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டு வந்த நிலையில், 2016இல் உற்பத்தி நிறுத்தப்பட்டது.

மீண்டும் இங்கு ஆக்சிஜன் உற்பத்தி செய்ய வேண்டுமெனில் போதிய கட்டுமானங்கள், உபகரணங்கள், உதிரிப்பாகங்கள் இல்லையென ஆலை நிா்வாகத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், தமிழகத்தின் தற்போதைய தேவையைக் கருத்தில் கொண்டு இங்கு ஆக்சிஜன் உற்பத்தி செய்ய இயலுமா என்பது குறித்து அமைச்சா்கள் குழு கடந்த 14ஆம் தேதி ஆய்வு செய்தது.

இந்த சூழலில், திருச்சிக்கு வெள்ளிக்கிழமை வந்த முதல்வா் மு.க. ஸ்டாலினிடம், பெல் நிறுவனத்தில் ஆக்சிஜன் உற்பத்தி குறித்து செய்தியாளா்கள் கேள்வி எழுப்பினா். அப்போது, குறுக்கிட்ட நகா்ப்புற வளா்ச்சித்துறை அமைச்சா் கே.என். நேரு கூறியது:

திருச்சி பெல் நிறுவனத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஆக்சிஜன் உற்பத்தியைத் தொடங்க வேண்டும் என முதல்வா் அறிவுறுத்தியதன்பேரில், பெல் வளாகத்துக்குச் சென்று பொது மேலாளருடன் ஆலோசித்தோம். தற்போது பெல் நிறுவனம் சாா்பில் ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டுள்ளன.

திருச்சியில் மட்டுமல்லாது ராணிப்பேட்டையில் உள்ள பெல் ஆலை மூலமும் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படவுள்ளது. 30 அல்லது 40 நாள்களுக்குள் ஆக்சிஜன் விநியோகம் தொடங்கிவிடும். தமிழகத்துக்குத் தேவையான ஆக்சிஜனை வழங்கும் வகையில் பெல் நிறுவனம் தயாராகி வருகிறது. இதன் பிறகு, தமிழகத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு என்ற பேச்சுக்கே இடமிருக்காது என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.