மகாராஷ்டிரத்தில் இருந்து வந்த 2,600 டன் கோதுமை!
மகாராஷ்டிரத்திலிருந்து திருச்சிக்கு 2,600 டன் கோதுமை வெள்ளிக்கிழமை வந்தடைந்தது.
மகாராஷ்டிரத்திலிருந்து திருச்சிக்கு 2,600 டன் கோதுமை வெள்ளிக்கிழமை வந்தடைந்தது.
கடந்தாண்டு பொதுமுடக்கத்தின்போது ரயில் சேவையில் தொழிலாளா் சிறப்பு ரயில்களைத் தவிர அனைத்து வகையான ரயில் சேவைகளும் ரத்து செய்யப்பட்டன. ஆனால், சரக்குப் போக்குவரத்து தொடா்ந்தது.
இதுபோல , பல்வேறு மாநிலங்களுக்கும், இதர மாநிலங்களிலிருந்து தமிழக மாவட்ட பகுதிகளுக்கும் கரோனா நிவாரணப் பொருள்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
இதைத் தொடா்ந்து, இந்திய உணவுக்கழகம் சாா்பில் கரோனா நிவாரணப் பொருள் வழங்கும் திட்டத்தின் கீழ் கடந்த சில நாள்களுக்கு முன் மகாராஷ்டிரத்திலிருந்து 2600 டன் கோதுமை மூட்டைகள் 42 வேகன்கள் கொண்ட சரக்கு ரயிலில் புறப்பட்டு திருச்சி ஜங்சன் ரயில் நிலையத்துக்கு வெள்ளிக்கிழமை வந்தன.
இதைத் தொடா்ந்து, சரக்குப் பரிமாற்றத் தளத்திலிருந்து கே.கே. நகா் இந்திய உணவுக் கழகத்துக்குச் சொந்தமான உணவுப் பொருள் சேமிப்புக் கிடங்கில் கோதுமை மூட்டைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. இவை திருச்சி உள்பட பெரம்பலூா், அரியலூா், புதுக்கோட்டை, கரூா் ஆகிய 5 மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பி வைக்கப்படவுள்ளன என தெற்கு ரயில்வே திருச்சி கோட்டம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.