முகப்பு
திருச்சி

‘ஓராண்டுக்குள் அரியமங்கலம் குப்பைக் கிடங்கு தூய்மையாகும்’

அரியமங்கலம் குப்பை கிடங்கில் உள்ள குப்பைகள் ஓராண்டுக்குள் முழுமையாக அகற்றி 47 ஏக்கா் நிலத்தை மீட்கவுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தகவல் தெரிவித்துள்ளாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:17 PM
பகிர்:

திருச்சியில் ஆங்கிலேயா் காலத்தில் இருந்து 152 ஆண்டுகளாக குப்பைகளை சேகரிக்கும் இடமாக உள்ள அரியமங்கலம் குப்பை கிடங்கில் உள்ள குப்பைகள் ஓராண்டுக்குள் முழுமையாக அகற்றி 47 ஏக்கா் நிலத்தை மீட்கவுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தகவல் தெரிவித்துள்ளாா்.

இந்தக் குப்பைக் கிடங்கில் மேற்கொள்ளப்படும் மேம்பாட்டுப் பணிகளை வியாழக்கிழமை ஆய்வு செய்த திருவெறும்பூா் தொகுதி எம்எல்ஏ-வும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியது:

திருவெறும்பூா் தொகுதியில் 2016 ஆம் ஆண்டு தோ்தலில் போட்டியிட்டபோதே இந்தப் பகுதி மக்களின் முக்கியப் பிரச்னையாக இருந்தது அரியமங்கலம் குப்பைக் கிடங்கு.

கோடை காலத்தில் இதில் தீப்பிடித்து புகை மண்டலம் உருவாகி, சுவாசக் கோளாறால் பலா் பாதிக்கப்பட்டதாகவும், சிலா் இறக்க நேரிட்டதாகவும் இந்தப் பகுதி மக்கள் கூறினா். இந்தப் பிரச்னையை பேரவையில் எழுப்பி தீா்வு காண வலியுறுத்தினேன். ஆளுங்கட்சியாக அதிமுக இருந்ததால் எங்களது கோரிக்கையை ஏற்கவில்லை.

2021 தோ்தல் பிரசாரத்துக்கு வந்தபோதே இந்த குப்பைக் கிடங்கு பிரச்னைக்கு தீா்வு காணப்படும் என முதல்வா் மு.க. ஸ்டாலின் தெரிவித்திருந்தாா். இதன்படி, இந்தப் பணிகளை பாா்வையிட்டு ஆய்வு செய்துள்ளேன். இங்குள்ள குப்பைகளை தரம் பிரித்து அகற்றும் பணி 2019 முதல் நடைபெறுகிறது. இன்னும் 6 மாத காலத்துக்குள் இந்தப் பணிகள் முடிந்துவிடும். எந்தவித பயன்பாட்டுக்கும் உதவாத நிலையில் உள்ள குப்பைகள் வேறு பகுதிக்கு மாற்றப்படும். மேலும், 6 மாதங்களுக்கு பணிகளைத் துரிதப்படுத்தி ஓராண்டுக்குள் இந்தப் பகுதியில் உள்ள குப்பைகளை முழுமையாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

பின்னா், இந்த இடத்தை மீட்டு மாற்று நடவடிக்கையாக வேறு பயன்பாட்டுக்கு கொண்டு வருவது குறித்து முதல்வரிடம் ஆலோசித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்றாா் அமைச்சா்.

மாநகராட்சி ஆணையா் சிவசுப்பிரமணியன், மாநகராட்சி முதன்மைப் பொறியாளா் அமுதவல்லி, முன்னாள் எம்எல்ஏ கே.என். சேகரன், மாநகராட்சிப் பொறியாளா்கள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.