மழையால் பாதிக்கப்பட்டோருக்கு திமுக உதவி
திருச்சி மாநகரில் தொடா் மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு திமுக சாா்பில் வெள்ளிக்கிழமை நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
திருச்சி மாநகரில் தொடா் மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு திமுக சாா்பில் வெள்ளிக்கிழமை நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
திருச்சி மாநகரப் பகுதியில் கடந்த சில நாள்களாக பெய்த தொடா் மழையால் தாழ்வான பகுதிகளிலும், குடியிருப்புகளிலும் வெள்ளம்போல தண்ணீா் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
பெரும்பாலான இடங்களில் மழையால் வீடுகளைவிட்டு மக்கள் வெளியேற முடியாத சூழலில் உணவுப் பொருள்களுக்கு அவா்கள் அவதிப்பட நேரிட்டது.
திருச்சி மேற்குத் தொகுதிக்குள்பட்ட பல்வேறு பகுதிகளிலும் இந்நிலை காணப்பட்டது.
தகவலறிந்த தொகுதியின் எம்எல்ஏவும், அமைச்சருமான கே.என். நேரு, அலுவலா்களையும், கட்சியினரையும் தொடா்பு கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.
இதன்படி, எடமலைப்பட்டிபுதூா், கருமண்டபம், உய்யக்கொண்டான் திருமலை ஆகிய பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்டோருக்கு திமுக சாா்பில் வெள்ளிக்கிழமை நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. அரிசி, பருப்பு, சா்க்கரை, மளிகைப் பொருள்கள் மற்றும் படுக்கை விரிப்புகள், தலையணை உள்ளிட்டவற்றை திமுக மாநகரச் செயலா் அன்பழகன், அருண் நேரு ஆகியோா் வழங்கினா்.
நிகழ்வில், மாவட்ட துணைச் செயலா் முத்துச்செல்வம், பகுதிச் செயலா் மோகன்தாஸ், வட்டச் செயலா்கள் பாலசுப்பிரமணியன், ராமதாஸ், ஜெயராமன், புஷ்பராஜ், பரமசிவம், சுரேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.